ஒற்றை வைக்கோல் புரட்சி
ஒற்றை வைக்கோல் புரட்சி, மசானபு புகோகா, தமிழில் பூவுலக நண்பர்கள், எதிர் வெளியீடு பதிப்பகம்.
தொழில் செய்வது தொழிலை கெடுக்க அல்ல! ஜப்பான் மொழியில், மசானபு புகோகா எழுதி, தமிழில், பூவுலக நண்பர்கள் மொழிபெயர்த்த ஒற்றை வைக்கோல் புரட்சி நூலை சமீபத்தில் படித்தேன். எதிர் வெளியீடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. உணவு தேவையை, வேளாண்மைதான் பூர்த்தி செய்கிறது. மண்ணின் தன்மை, அதன் உற்பத்தித் திறனுக்கு ஏற்பவே, சாகுபடி இருக்கும். ஒரு கோழி, ஒரு நாளைக்கு எத்தனை முட்டையிடும் என்பது, அந்த கோழியின் தன்மையை பொறுத்தது. ஆனால் மண்ணின் தன்மைக்கு மாறாகவும், கோழியின் தன்மைக்கு மாறாகவும், கூடுதல் உற்பத்தியை செய்ய, உரத்தையும், பூச்சிக்கொல்லி மருந்தையும் பயன்படுத்துவதால், சராசரிக்கும் அதிகமான விளைச்சலை ஈட்டுகின்றனர். இந்த முறை தொடர்வதால், மண்ணும், கோழியும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறுகிறது. அவை அளிக்கும் உணவும், நச்சைக்கக்குகிறது. இதை உட்கொள்ளும் மனிதனும், நோய்வாய்ப்படுகிறான். நோயை குணப்படுத்த, மீண்டும் மருந்தை உட்கொள்கிறான். இதைத்தான் இந்த நூல் சொல்கிறது. ஒரு தொழிலை செய்வோர், அந்த தொழிலை மேம்படுத்த வேண்டுமே, தவிர அந்த தொழிலை கெடுக்கக்கூடாது. தற்போதைய தொழில்நுட்பங்கள், மண்ணை மேம்படுத்துவதற்கு பதில், அதை கெடுக்கிறது என, மிக உறுதியான வாதங்களை, ஆதாரத்துடன் முன்வைக்கிறார் நூல் ஆசிரியர். நம்மூர் கிராமங்களில், வேலை முடித்து வருவோருக்கு பொழுதுபோக்கோடு கருத்துகளை சொல்வதற்காக, வள்ளி, திருமண நாடகம் நடத்துவர். நாடகத்துக்கு அனைவரும் வருவதற்கு, அவகாசம் அளிக்க கோமாளியின் கூத்து, நாடகத்துக்கு முன் நடக்கும். துவக்கத்தில் சிறிது நேரம் நடந்து வந்த கோமாளியின் கூத்து, நாளாக நாளாக நாடக நிகழ்ச்சியின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து வள்ளி நாடகம் குறைந்துவிட்டது. அதுபோலத்தான், பூச்சிகளைத் தடுக்கப் பயன்படுத்திய உரம், விளைச்சலை ஆக்கிரமித்து, உணவை நச்சாக்கிவிட்டது. தொழில் செய்வோர் தொழிலை கெடுத்துவிட்டனர். – மணிகண்டன், திரைப்பட இயக்குனர், நன்றி: தினமலர், 31/5/2015.