திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள்
திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், பக். 295, விலை 360ரூ.
திருமூலரை சித்தர், முனிவர், யோகி, ஞானி என்றெல்லாம் பலரும் அறிந்திருப்பர். ஆனால் அவர் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், கணித மேதையாகவும், தாவரவியல் நிபுணராவும், புவியியல் வல்லுநராகவும், மருத்துவ நிபுணராகவும் விளங்கியுள்ளார் என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. திருமூலரின் ஆன்மா, கடவுள் பற்றிய கணக்கியல், திருமூலரும் புவி இயலும், திருமூலம் சித்த மருத்துவமும், உடற்கூற்றியலும், திருமூலரின் கருவுறுதல் தத்துவம், திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ள தாவரங்களின் வகைகள், அத்தாவரங்கள் பற்றிய விளக்கங்கள், தாவரங்களின் வண்ண ஓளிப்படங்கள் (86) என ஒன்றையும் விடாமல் ஆய்வுக்கண்கொண்டு பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். திருமந்திரத்தில் தாவரப் பெயர் உள்ள பாடல்களைக் குறிப்பிட்டு, அத்தாவரம் பற்றிய விளக்கம், வகைப்பாடு, அதன் தமிழ்ப் பெயர், ஆங்கிலப் பெயர், பயன்பாடு, தாவரத் தகவல் மையப் பெயர், தாவரங்களின் பண்புகள், அதன் வேறு பெயர்கள் என ஒவ்வொரு தாவரத்துக்கும் தனித்தனிப் பட்டியலிட்டு காண்பித்துள்ளார். எடுத்துக்காட்டாக, திருமந்திரம் நான்காம் தந்திரத்தில் உள்ள 1003-ஆவது பாடலான அம்புயம் நீலம் கழுநீர் அணி நெய்தல் என்ற பாடலில் வரும் கழுநீர் என்ற தாவரத்தின் தமிழ்ப்பெயர் சிறுமுள்களா என்றும், இனம் – பூக்கும் தாவரம், தலைமுறை – இரு வித்திலை, வகுப்பு – இணை இதழ்தாவரம், குலம் – இருசூலக இலைகள், குடி – மணிப்பூங்குடி, பிறவி – களா, பெயர் வழி – சிறுமுள், தாவரவியல் பெயர் – சிறுமுள் களா, வளரியல்பு – புதர்ச்செடி என்று இவ்வாறு பிரித்துப் பிரித்து எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளது. தாவரவியல் படிக்கும் மாணவர்களுக்கான தாவரவியல் குறித்து மேலாய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கான அரிய படைப்பு இந்நூல். நன்றி: தினமணி, 17/8/2015.