உணவில் உறையும் வாழ்வியல் அறம்

உணவில் உறையும் வாழ்வியல் அறம், சாவித்திரி கண்ணன், மாணிக்கசுந்தரம் பப்ளிகேஷன்ஸ், பக். 80, விலை 50ரூ.

உணவு தேர்வில் நிலவும் அறியாமை உடல் நலன் பேணுதல் குறித்த கவலை, தமிழகத்தில் ஏற்பட துவங்கி உள்ளது. அது பற்றிய சிந்தனை, எழுத்தாகவும், உணவு பரிமாற்ற முகாம்களாகவும், பயிற்சி பட்டறைகளாகவும் வெளிப்பட்டு வருகின்றன. விவாதங்களும் துவங்கி உள்ளன. நலவாழ்வுக்கு அடிப்படை, அறம் நிறைந்த உணவும் சுற்றுச்சூழலும்தான். அவற்றை கிட்டத்தட்ட இழந்த நிலையில்தான் தமிழகம் உள்ளது. இதை பெருகிவரும், நட்சத்திர அந்தஸ்திலான மருத்துவமனைகளின் எண்ணிக்கையை முன் வைத்தே நிரூபித்து விட முடியும். அதற்கு வேறு ஆதாரங்கள் தேவையில்லை. தமிழகத்தில் வீழ்ச்சி கண்டுள்ள உடல்நல சிந்தனையை மீட்கும் முயற்சியாக, மாற்று உணவு கலாசாரத்தை பரப்புவது, பல இடங்களிலும் துவங்கி உள்ளது. இந்த முயற்சி விரும்பத்தக்கது. மாற்று உணவு என்பது, புதிய ஒன்றாக இல்லாமல், பாரம்பரியத்தில் இருந்து மீட்டுருவாக்கும் வகையில் பல குழுவினரும், தனி நபரும், முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ‘ இந்த மண்ணோடு, இதில் வாழ்வோருக்கான தொடர்பை வலுப்படுத்தும்வகையில், கட்டமைப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் இவை. இதில் ஒரு பகுதியாக, இந்த நூல் வெளிவந்துள்ளது. இதில், 13 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும், வாழ்வுடன் உணவுக்கு உள்ள பங்கை, தொடர்பை இயல்பாக சித்தரிக்கிறது. உணவுக்கும், உற்பத்தியாளனுக்கும், சமூகத்துக்கும் உள்ள தொடர்பை தொட்டு நிற்கிறது. கட்டுரைகள் அனுபவம் சார்ந்தவை. நூலாசிரியர், உணவு தேர்வில் உள்ள அறியாமையை, சொற்கள் மூலம் மட்டும் சுட்டிக்காட்டவில்லை. அறியாமையை அகற்ற, உதாரணத்துவமாக பல்வேறு ரக உணவை படையலாக்கியும் வருகிறார். உணவு கலாசாரம் சார்ந்த கருத்தரங்கங்களையும், அவற்றில் மாற்று உணவையும் பரிமாறி வருகிறார். உணவு-வாழ்க்கை-பகிர்தல்-சமூகம் என்ற தொடர்பை, உணவு பண்பாட்டின் வழியாக, கட்டுரைகளில் வெளிப்படுத்துகிறார். நலவாழ்வுக்கு உகந்த உணவை சுவைத்தோரின் அனுபவ பகிர்வும், நூலில் தொகுக்கப்பட்டு உள்ளது. ‘மாத பட்ஜெட்டில், மளிகைக்கான செலவுக்கு ஒதுக்கும் பணத்துக்கு இணையாக அல்லது அதற்கும் கூடுதலாக மருந்து, மாத்திரை, டாக்டர் கட்டணங்களுக்கு செலவழிக்கும் அநேக குடும்பங்கள் நாட்டில் உள்ளன. ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளும் யாராவது ஒருவராவது நோயாளியாக இல்லாமல் இல்லை என்ற நிலை தோன்றி உள்ளது.’(பக். 26). -மலரமுதன். நன்றி: தினமலர், 13/3/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *