உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும் யோகாசனங்கள்
உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும் யோகாசனங்கள், கவியோகி வேதம், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், பக். 192, விலை 110ரூ.
யோகிராஜ் வேதாத்ரி மகரிஷியிடம் பயிற்சி பெற்ற இந்நூலாசிரியர் 75 வயதைக் கடந்தவர். இவர் குண்டலினித் தியானம், முத்ரைகள், ஆசனங்கள், யோகா, புத்தகங்கள் போன்றவற்றில் மிகுந்த அனுபவம் பெற்று, அவற்றை பலருக்கும் கற்பிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இந்நூலில் யோகா மற்றும் ஆசனங்கள் குறித்து 18 அத்தியாயங்களை எழுதியுள்ளார். ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில் தியானங்கள் குறித்தும், அவற்றுக்கான முன்னெச்சரிக்கைகள், இவை குறித்து எழும் பல்வேறு சந்தேகங்கள், தியானத்தை, விஞ்ஞானம் ஏற்றுக்கொள்வது, தியானம் செய்வதால் ஏற்படும் பலன்கள், ஆழ்மனத் தியானம் மூலம் நிரூபிக்கப்பட்ட சில விஞ்ஞான உண்மைகள், தியானப் பயிற்சிகள், தியானத்தினால் உருவாகும் பற்பல சித்திகள்… என்று தியானம் குறித்து பல்வேறு விபரங்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. தவிர யோகா குறித்தும், அவற்றைத் தொடங்கும் முன் பின்பற்றப்பட வேண்டிய விதிகள் குறித்தும், பிரணாயாமம், அவை குறித்த விபரங்கள், அதைப் பயிலும் முறைகள், மூலபந்தம் போன்ற சில மூச்சுப் பயிற்சிகள், முத்ரைகள்… என்று பல விபரங்கள் உரிய வரைபடங்களுடன் இந்நூலில் ஆசிரியர் விளக்கியுள்ளது பாராட்டத்தக்கது. -பரக்கத். நன்றி: துக்ளக், 23/3/0216.