மேக்நாட் சாகா ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை

மேக்நாட் சாகா ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை, தேவிகாபுரம் சிவா, பாரதி புத்தகாலயம், பக்.288, விலை ரூ.230.

தேவிகாபுரம் சிவா எழுதிய, ‘மேக்நாட் சாகா’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலை
சமீபத்தில் படித்தேன். பாரதி புத்தகாலயம் வெளியிட்டு உள்ளது. புறக்கணிக்கப்பட்ட இந்திய விஞ்ஞானியின் வரலாற்றை விவரிக்கும் நூல் இது. வங்கதேசம் பிரிக்கப்படாத போது அங்கு பிறந்தவர். பெட்டிக் கடைக்காரரின் எட்டு குழந்தைகளில், ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார்.

வறுமையின் காரணமாக, துவக்கப் பள்ளிக்குப் பின், வீட்டுவேலை செய்து படித்தார். வங்கப் பிரிவினையின் போது, ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால், பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். மிகுந்த வாழ்க்கைப் போராட்டங்களுக்கு இடையே, உயர்கல்வி பயின்று, பேராசிரியர் பணிக்கு சென்றார்.

தொடர்ந்து அவர் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம், வானவியலில்
நிலவும் பல்வேறு புதிர்களுக்கு விடை காணும், ‘வெப்ப அயனியாக்க கோட்பாடு,
கதிர்வீச்சு அழுத்தக் கோட்பாடு, புற ஊதா கதிர் கோட்பாடு’ என, பலவற்றைக்
கண்டுபிடித்தார். இவற்றுக்கான எந்த அங்கீகாரமும் அவருக்கு கிடைக்கவில்லை.
காரணம், ‘சாகா’ என்ற தாழ்த்தப்பட்ட ஜாதி தான் குறுக்கே நின்றது. சர் சி.வி.ராமன்,
ஹோமி பாபா போன்ற விஞ்ஞானிகளுடன் அவர் பணியாற்றினார். ஆனால், அவர்களே அவருக்கு எதிரியாக இருந்தனர் என, நூலாசிரியர் கூறுகிறார்.

அறிவு இருப்பவனுக்கு வாய்ப்பு கிடைத்தால், அவன் எட்ட முடியாத தூரத்துக்கு செல்வான். ஆனால், அந்த உயரத்தை இந்த சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்றால், உரிய பின்புலம் இருக்க வேண்டும். இல்லையேல், எந்த உயரத்தை எட்டினாலும், உலகுக்கு தெரியாது. அதுதான், மேக்நாட் சாகா வாழ்வில் நடந்ததாக நூல் சொல்கிறது.

மூன்று முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெருமை மட்டும் சாகாவுக்கு
கிடைத்ததே தவிர, நோபல் பரிசு கிடைக்கவில்லை. தனக்கு ஏற்படுத்தப்பட்ட பல
தடைகளைத் தாண்டி, அவர் முன்னேறினார். அவருக்கு உரிய சமூக அங்கீகாரம்
கிடைக்கவில்லை என, எப்போதும் சோர்ந்து நின்றதில்லை. இதுவே, இன்றைய
இளைஞர்களுக்கு, சாகா விட்டுச் சென்றது. அதனால் தான், சாகாவின் வரலாற்றை
புரட்சிகர விஞ்ஞானியின் கதை என, நூல் ஆசிரியர் கூறுகிறார்.

பிரளயன்,

நாடக ஆசிரியர்,

நன்றி: தினமலர், 17/4/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *