காலம் தோறும் நரசிங்கம்(பண்பாட்டுக் கட்டுரைகள்)

காலம் தோறும் நரசிங்கம்(பண்பாட்டுக் கட்டுரைகள்), ஜடாயு, தடம் பதிப்பகம், பக். 203, விலை 130ரூ.

ஒவ்வொரு சிந்தனையுடன், வரலாறு, பண்பாடு, கலாசாரம், மதம், வழிபாடு உள்ளிட்டவற்றை பார்க்கும் போது, அதன் வடிவம் வேறுபடும்.
அவ்வாறு, ஆசிரியர் ஜடாயு தனது பார்வையில் பண்பாடு சார்ந்த சிந்தனைகளை கட்டுரைகளாக வடித்துள்ளார். பல்வேறு காலங்களில் அவர் எழுதி வெளிவந்த பண்பாட்டுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, நூல் வடிவில் வெளியாகி இருக்கின்றன.

காந்தியின் கிராம ராஜ்ய கனவு முதல், வேதநெறி, அப்துல் கலாம், ஹிந்துத்துவம் என, பலதரப்பட்ட விஷயங்களை எடுத்துரைக்கிறார். ராமன், லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்டவை மத ரீதியானவை என்றாலும், அவற்றினுள் விளங்கும் பண்பாட்டுக் கூறுகளை நூலாசிரியர் வியந்து எடுத்துரைக்கிறார்.

நரசிம்ம அவதாரம், நமது வரலாற்றோடு பின்னிப் பிணைந்து இருப்பதை நிறுவுகிறார். கன்னியாகுமரி முதல், காஷ்மீர் வரை நரசிம்ம அவதாரத்தின் தத்ரூப சிற்பங்களை பட்டியலிடும் அவர், அதன் சிறப்பு இயல்புகளையும், தனித்தன்மையையும், படங்களுடன் விளக்கி உள்ளார்.

அப்துல் கலாமின் எளிய வாழ்க்கையை விளக்கியுள்ள நூலாசிரியர், பண்பாடு, செல்வம் ஆகியவற்றில், கலாமின் மதிப்பீடு, காந்தியிடம் இருந்து மாறுபட்டு இருந்ததை பதிவு செய்கிறார்.

சிவன் வேறு, ருத்ரன் வேறு என்ற வாதத்திற்கு சரியான விளக்கமளித்துள்ளார். நாயன்மார்களின் வாக்குகள், வேதங்களில் அதற்கு பதில் இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார். ‘தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்ற சைவர்களின் முழக்கத்தை பற்றி, தமிழகத்தில் வெவ்வேறு விதமான விளக்கங்கள் சொல்லப்படுவதுண்டு. தேசத்தை ஒன்றாக கண்டே இந்த முழக்கம் உருவானதாக கோடிட்டு காட்டுகிறார். அதுபோலவே வடகலை, தென் கலை வைணவத்தில் வேறுபாடு உண்டா என்பதையும் விளக்கியுள்ளார்.

ஒரே பெயரில் பல புலவர்கள் இருப்பது இயல்பானது. பல காலங்களில் வாழ்ந்த அவ்வையாரை பற்றியும் விளக்கங்கள் உண்டு. அந்த வகையில், வியாசரை பற்றி விரிவான விளக்கம் அளித்துள்ளார். புராண காலம் தொட்டு வாழ்ந்த, வியாசர் பலரை பட்டியலிடுகிறார். புராணங்களில் கற்பனை கலந்து இருப்பதையும், அதன் ஊடே இருக்கும் வரலாற்றையும் விளக்குகிறார்.

சென்னையில் உள்ள வியாசர்பாடிக்கும், வியாசருக்கும் என்ன தொடர்பு? அதையும் கூறியிருக்கிறார்.

ஜே.பி.,

நன்றி: தினமலர், 26/6/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *