கணினி யுகத்திற்குத் திருவள்ளுவர்
கணினி யுகத்திற்குத் திருவள்ளுவர், இரா. மோகன், வானதி பதிப்பகம், பக்.208, விலைரூ.150.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட குறள், இந்தக் கணினி யுகத்துக்கும் பொருத்தமானதாக இருக்கிறது.
இன்றைய நவீன யுகத்தில், அறிவுலகில் விவாதிக்கப்படும் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் குறள் உரக்கப் பேசுகிறது. குறிப்பாக, அதிகமாகவும், பரவலாகவும் விவாதத்துக்கு உள்படுத்தப்படும் “ஆளுமை வளர்ச்சி, மனித வள மேம்பாடு, விழுமியக் கல்வி (Value Education), தொடர்பியல் திறன்கள், உடன்பாட்டுச் சிந்தனை’ ஆகியவற்றுக்கு திருக்குறள் கருத்துகள் எவ்வாறு வலுசேர்க்கின்றன என்பது குறித்து விரிவாக ஆராய்கின்றன மேற்கண்ட தலைப்புகளிலான கட்டுரைகள்.
மேலும், வள்ளுவர் எடுத்தியம்பும் “உணவியல் நெறிமுறைகள்’, “பொருளியல் சிந்தனைகள்’, “அறிவார்ந்த உணர்ச்சி ஆளுகை’, “புலப்பாட்டு நெறி’ ஆகிய தலைப்புகளிலும் கட்டுரைகள் உள்ளன.
அறிஞர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள், வரலாற்றுச் செய்திகள், சின்னச் சின்னத் தகவல்கள், கவிதைகள் என, நூலாசிரியர் எடுத்தாளும் உதாரணங்கள் நூலை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.
திருக்குறளைப் புதிய புதிய கோணங்களில் ஆராய்ச்சி செய்ய நினைப்போருக்குப் பேருதவியாகவும், தூண்டுகோலாகவும் இருக்கும் அரிய நூல்.
நன்றி: தினமணி, 6/6/2016.