இது நம் குழந்தைகளின் வகுப்பறை
இது நம் குழந்தைகளின் வகுப்பறை, சூ. ம. ஜெயசீலன், அரும்பு பப்ளிகேஷன்ஸ், பக்.160, விலை ரூ.160.
மாறி வரும் உலகமயச் சூழலில் கல்வி வணிகமாக்கப்பட்டு, தனியார் பள்ளிகள் புற்றீசல் போல பெருகி வரும் நிலையில், வகுப்பறைச் சூழல், பாடத்திட்டங்களும், மதிப்பெண் சார்ந்த வெற்றி தோல்விகளும் அவ்வப்போது விவாதப் பொருள்களாகி வருகின்றன. இதுபோன்ற நிலையில், கற்றல் – கற்பித்தலில் சமூக அக்கறையுடன் பல்வேறு கூறுகளை இந்நூலில் அணுகியுள்ளார் நூலாசிரியர்.
பள்ளிப் பருவத்தில் தனக்கு ஏற்பட்ட நினைவுகளையும், சமூகத்தில் பெரும் ஆளுமைகளாக வலம் வருவோர், சக ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரின் அனுபவங்களையும் நூலில் விரிவாகப் பதிவு செய்துள்ளார். மாணவர்களிடம் இயல்பாக உள்ள கற்றல் திறனைக் கண்டறிந்து அதற்கு ஏற்றாற்போல ஆசிரியர்கள் பாடங்களை நடத்த வேண்டும், வகுப்பில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மெய்பொருள் காண்பது அறிவு என்பதைப் பயிற்றுவிக்க வேண்டும், கேள்வி கேட்கும் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு கோரிக்கை விடுக்கிறார்.
கல்வி பயிலும் மாணவர்கள் தாய்மொழியை நன்கு பயில வேண்டும் என்பதை வலியுறுத்தும் நூலாசிரியர், மாணவர்களின் குறைகளைச் சொல்ல பெற்றோரை அழைக்கும் ஆசிரியர்கள், அவர்களது திறமையைப் பாராட்டவும், ஊக்கப்படுத்தவும் பெற்றோரை அழைக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.
மாணவர்களுக்குப் பாடங்களை இயந்திரத் தனமாகக் கற்பிக்காது, சமூக நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டி அவர்கள் மத்தியில் கலந்துரையாடலை ஏற்படுத்த வேண்டும், படிக்கும் பாடத்தை பிற பாடங்களுடன் தொடர்புப்படுத்தி மாணவர்கள் படிக்க வேண்டும் என்கிறார். ஆசிரிய-மாணவ சமுதாயத்துக்கு வழிகாட்டி இந்நூல்.
நன்றி: தினமணி, 22/8/2016.