வள்ளலார் மூட்டிய புரட்சி
வள்ளலார் மூட்டிய புரட்சி, பழ.நெடுமாறன், ஐந்திணை வெளியீட்டகம், பக். 160, விலை ரூ.150.
திருவருட்பிரகாச வள்ளலாரை ஓர் ஆன்மிகவாதியாக மிகப் பெரிய ஞானியாக மட்டுமே அறிந்து வைத்துள்ளவர்களுக்கு அவரை மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியாக, மனித நேயப் பண்பாளராக, மொழிப்பற்றாளராக இன்னும் பல்வேறு கோணங்களில் அவரது அருமை பெருமைகளை இந்நூலின் வாயிலாக எடுத்தியம்பி இருக்கிறார் பழ.நெடுமாறன்.
19-ஆம் நூற்றாண்டின் தனிப்பெரும் சிந்தனையாளராக வள்ளலார் சிறப்பிடம் பெற்றுள்ளார். வள்ளலார் பெருமான் உலகிற்கு வழங்கிய அழியா முழு முதற்கோட்பாடு ஒன்றே ஒன்றுதான். அதுவே சீவகாருண்யம் என்னும் உயிரிரக்கப் பண்பு. கடவுள் ஒருவரே என்ற உண்மையை வள்ளலார் மக்களுக்கு உணர்த்தினார்.
அதேவேளையில், புராணங்கள் எல்லாம் தத்துவங்களை விளக்கப் புகுந்த கற்பனைக் கதைகளே என்பதனை மக்களிடம் பரப்பினார். தெய்வத்தை வழிபடும் முறையிலும் காலத்திற்கேற்ற (பகுத்தறிவாளரும்) ஏற்கத்தக்க மாறுதல்களைப் போதித்தார். புரட்சிகரமான சீர்திருத்தவாதியாகிய அவர், மனிதனைத் தெய்வமாகக் கருதும் வழக்கத்தை எதிர்த்தார்.
தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு முதன் முதலாகத் திருக்குறள் கற்பித்தவர் வள்ளலாரே. தமிழ்நாட்டில் முதன்முதலாக முதியோர் கல்வியை ஏற்படுத்தியவர் வள்ளலாரே. உயிர்களுக்குப் பசி, தாகம், பிணி, இச்சை,எளிமை, பயம், கொலை என்பவற்றால் துயர்கள் வருமென்றும், அவற்றை விலக்குதலே அருளாளர் கடமை என்று கூறும் வள்ளலார், இவ்வேழு துயர்களினும் பசியையும் கொலையும் விலக்குதலை முதன்மையாக்கி இறுதியில் பசி நீக்குதலே அனைத்துத் துயரும் நீக்குதலாம் என நிறுவுகிறார். சிறந்த நூல்.
நன்றி: தினமணி, 21/8/2016.