ஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரை
ஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரை, கா. செல்லப்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 100, விலை 70ரூ.
ஷேக்ஸ்பியர், கார்ல்மார்க்ஸ், ஷெல்லி, வேர்ட்ஸ்வொர்த் போன்ற உலகளாவிய பெருமை மிக்க ஆளுமைகள் குறித்து இதுவரை அறியப்படாத தகவல்கள், காந்தி, தாகூர், நேரு போன்ற இந்திய பிரபலங்களின் சிறப்புகள், பாரதியார், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம், ஜெயகாந்தன், கண்ணதாசன் ஆகியோர் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு என மிகச் சிறந்த படைப்பாளிகள் குறித்து 22 அத்தியாயங்களில் கட்டுரை வடிவில் தொகுத்துள்ளார் நூலாசிரியர்.
நடுக்கோடையிரவுக் கனவு, வெனிஸ் நகர வணிகன் உள்ளிட்ட ஷேக்ஸ்பியரின் பிரபலமான நாடகங்கள் உலகிற்குக் கூறும் செய்திகள் எவை?, கவிஞர் ஷெல்லி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து ஏன் விலக்கப்பட்டார்? என்பன போன்ற வினாக்களுக்கு இந்த நூலில் உள்ள சில அத்தியாயங்கள் பதில் கூறுகின்றன. இயற்கையை நேசித்த கவிஞர் வேர்ட்ஸ்வொர்த்தின் புகழ்பெற்ற “டாஃபடில்ஸ்‘’ (மஞ்சள் பூக்கள்) என்ற பாடல் எந்தச் சூழ்நிலையில் எழுதப்பட்டது என்பதை நூலாசிரியர் விளக்கும்போது இயற்கை நமது வாழ்வோடு ஒன்றியிருப்பதை உணர முடிகிறது.
பல புதிய தகவல்கள் நிரம்பிய இந்நூல், இன்னும் எளிய நடையில் எழுதப்பட்டிருந்தால் வாசிப்பனுபவம் இனிமையாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.
நன்றி: தினமணி, 14/8/2016.