இஸ்லாம் ஒரு பார்வை
இஸ்லாம் ஒரு பார்வை, டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, கிழக்குப் பதிப்பகம், பக். 128, விலை 120ரூ.
மனிதன் சீரிய ஒழுக்கத்துடனும், நெறிகளுடனும், பண்புகளுடனும், அமைதியாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் அன்று உருவானதுதான் மதங்கள். ஆனால், இன்று உலகில் நடக்கும் சில தீங்குகளுக்கு இந்த மதங்களும் ஒரு காரணம் என்ற விபரீதமான கருத்து சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த விமர்சனத்திற்கு இஸ்லாம் தற்போது பலிகடாவாகி உள்ளது.
பன்முகத் தன்மையும், மதச்சார்பற்ற கொள்கையும் கொண்டு உலகின் சிறப்புக்குரிய நாடாக விளங்கும் இந்தியாவில், இதுபோன்ற விஷக் கருத்துக்கள் மக்களிடையே துவேஷத்தை ஏற்படுத்தி, அமைதியைக் கெடுத்து, ஒற்றுமையைக் குலைத்து விடும் என்ற அச்சத்தில், இஸ்லாம் மார்க்கம் குறித்து ஒரு கட்டுரைத் தொடர் துக்ளக்-ல் வரவேண்டும் என்று ஆசிரியர் விரும்பினார். அதற்கேற்ப துக்ளக்-ல் இந்நூலாசிரியர் எழுதிய கட்டுரைகள், பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன. அது தற்போது நூல் வடிவில் வந்துள்ளது.
அலோபதி டாக்டரும், மார்க்க அறிஞருமான இந்நூலாசிரியர், 40 ஆண்டுகளுக்கு மேலாக சமய நல்லிணக்க நிகழ்ச்சிகளிலும், மாற்று மதத்தவர்களின் இஸ்லாம் குறித்த வினாக்களுக்கு விடை அளிக்கும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, பிற மதத் தலைவர்களின் பாராட்டையும் பெற்று வருகிறார். இந்நூலில் இஸ்லாம் குறித்த பல ஆன்மீக கருத்துக்களுடன், ஷியா – சன்னி பிரிவு எப்படி வந்தது, காஃபிர்களை கொல்லும்படி குர்ஆன் கூறுகிறதே, இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகிறதே, உலகில் நடக்கும் பல பயங்கரவாதச் செயல்களுக்கு முஸ்லிம் அமைப்புகள் காரணமாகிறதே… இப்படி பல முரணான கருத்துக்களும், திருக்குர்ஆன், ஹதீஸ்களின் அடிப்படையில் அருமையாகவும், எளிமையாகவும் ஆசிரியர் அளித்திருக்கும் விளக்கம் பாராட்டத்தக்கது.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 17/8/2016.