பிம்பச் சிறை

பிம்பச் சிறை, எம்.எஸ். பாண்டியன், பிரக்ஞை பதிப்பகம், பக். 248, விலை 225ரூ.

திராவிட இயக்க ஆய்வாளரான இந்நூலாசிரியர் 24 ஆண்டுகளுக்கு முன்னர் எம்.ஜி.ஆரைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய இந்நூல், தமிழில் இப்போது வெளிவந்துள்ளது.

எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல நிகழ்விலிருந்து தொடங்குகிறது இந்நூல். எம்.ஜி.ஆர். மீது தமிழக மக்கள் வைத்திருந்த அபரிமிதமான பற்று (எம்.ஜி.ஆர். இறந்தபோது ஏராளமானோர் மொட்டையடித்துக் கொண்டது, 31 பேர் தற்கொலை செய்து கொண்டது), எம்.ஜி.ஆர். தனது படங்களுக்கு அடித்தட்டு மக்களிடமிருந்தே தலைப்புகளைப் பெற்றது (“தொழிலாளி’‘, “விவசாயி’‘, “படகோட்டி‘’), ஆரம்ப காலப் படங்களில் அரசியல் பரப்புரையில் ஈடுபட்டது (நாத்திகவாதம், இந்தி எதிர்ப்பு, வடக்கு எதிர்ப்பு),

பின்னர், கட்சியின் பெயரை, சின்னத்தை, நிறத்தை, தலைவர்களின் பெயர்களைத் தன் படங்களில் பயன்படுத்துதல் (கருப்புச் சட்டை போடுதல், கதிரவன் என்று பெயர் வைத்துக் கொள்வது, “காஞ்சித் தலைவன்’‘ என்று தலைப்பு வைப்பது), பாடல்களில் அரசியல் பரப்புரை செய்வது (“சூரியன் உதிச்சதுங்க இங்கே காரிருள் மறைஞ்சதுங்க‘’, “படியரிசி கிடைக்கிற காலத்துல நாங்க படியேறி பிச்சை கேக்க போவதில்லே’‘) – இப்படி சராசரி திரைப்பட ரசிகனின் மனவோட்டத்தைத் துல்லியமாகப் புரிந்து அவனைக் களிப்பூட்டும் விதமாகவே தனது அத்தனை படங்களையும் உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். என்பதை அரிதான பல தரவுகளோடு நிறுவுகிறது இந்நூல்.

உழைக்கும் மனிதன் ஒருவன் அன்றாடம் நடக்கும் அநீதிகளை எதிர்த்துப் போராடுவதே பெரும்பாலான எம்.ஜி.ஆர். படங்களின் ஒரு வரிக் கதை.

திரைப்பட உலகில் முடிசூடா மன்னனாக இருந்தாலும் அரசியலைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர். செய்தது எதுவும் பாராட்டும்படி இல்லை என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர். எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலம் ஏழைகளிடம் மகத்தான ஆதரவைப் பெற்ற, ஆனால், பணக்காரர்களின் நலன்களுக்குப் பாடுபட்ட ஆட்சி என்று கூறுகிறார்.

இதற்கும் மேலாக, “எம்.ஜி.ஆரின் 11 வருட ஆட்சிக்காலம் சந்தேகமே இல்லாமல் தமிழகத்தின் சமகால வரலாற்றின் இருண்ட காலங்களில் ஒன்று’’ என்று கூறுகிறார். இந்தக் கருத்து விமர்சனத்துக்கு உட்பட்டது என்றாலும்கூட, எம்.ஜி.ஆரை திராவிட இயக்கத்தவரில் ஒருவராகக் கருதாதவர்களின் கருத்து என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆயினும், இந்நூலுக்காக ஆசிரியர் மேற்கொண்ட ஆய்வுகள், நம்மைத் திகைக்க வைக்கின்றன.

ஆண்டுவாரியாக எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் பட்டியலும், அவர் தொடங்கிய கட்சியின் தேர்தல் செயல்பாடுகளும் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன. திரைப்பட ஆர்வலர்கள் மட்டுமல்ல, அரசியல் ஆர்வலர்களுக்கும் பயன்படும் பல அரிய தகவல்கள் அடங்கிய நூல் இது. விமர்சனத்துக்கு உரிய நூல்!

நன்றி: தினமணி, 14/8/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *