பார்த்தீனியம்
பார்த்தீனியம், தமிழ்நதி, நற்றிணை பதிப்பகம், விலை 450ரூ.
தமிழீழத்தில் நடந்த இன அழித்தொழிப்பு பின்புலமாக உடன் நிற்க, ஈழ நினைவுகளை துல்லியமாகவும், நேர்த்தியுடனும் வாசகப் பரப்பில் முன் வைக்கிறது பார்த்தீனியம்.
வரலாறு போலவும், நடப்பு போலவும், நாம் எல்லோரும் அதில் சம்பந்தப்பட்டது மாதிரியும் ஏக வடிவங்களில் நாவல் விரிவது பேரழகு. தமிழ்நதியின் மொழி நடையில் அலங்காரங்கள் இல்லை. அவரின் கவிதைகளில் கூடி வருகிற காவியத்தன்மை கூட இதில் இல்லாதது கதை சொல்லலை எளிதாக்குகிறது.
இயல்பில் நாம் சந்தித்தவர்களே பாத்திரங்களாக வருகிறார்கள். கற்பனைப் பாத்திரங்களின் நுழைவெல்லாம் விலகி நிற்கிறது. ஒரு பெரிய வரலாற்றை, இனத்தின் அழிவை, அதன் நெகிழ்வை இவ்வளவு வலுவான மொழியில் சொல்ல முடிவது தமிழ்நதியின் அனுபவச் செறிவு. பொய் அல்லாது, உண்மையின் சாயல் பெரிதும் கொண்டதால் நாவலின் கண்ணியமும் காப்பாற்றப்படுகிறது.
பெருந்துயரின் மேலெழும்பி நிற்கக் கூடிய அருமையான படைப்பு. வாசிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நன்றி: குங்குமம், 12/8/2016.