ஈழத்தில் தமிழ் இலக்கியம்
ஈழத்தில் தமிழ் இலக்கியம், கார்த்திகேசு சிவத்தம்பி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 289, விலை 240ரூ.
ஒரு குறிப்பிட்ட இனத்தின் மொழி வளர்ச்சி, அதன் போக்கு, அதில் வெளிப்படும் பண்பாடு ஆகியவையே அந்த மொழி பேசும் மக்களின் முழுமையான அடையாளமாக விளங்கும் என்ற அடிப்படையில் இந்த நூல் பல பகுதிகளாக தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர் இலக்கியம் கடந்த 1950 வரை தமிழக இலக்கியத்தையே சார்ந்திருந்தது. அதன் பின்னர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வளர்ந்தது. இலங்கைத் தமிழ் இலக்கியப் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. பல நூல்கள் வெளியிடப்பட்டன. இவற்றைப் பற்றி “முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், ஈழத்தில் தமிழ் இலக்கிய வளர்ச்சியும்’ என்ற கட்டுரை விரிவாகக் கூறுகிறது.
தமிழகத்தின் இலக்கிய விமர்சனத்துக்கும், இலங்கை தமிழ் இலக்கிய விமர்சனத்துக்கும் உள்ள வேறுபாட்டை “ஈழத்தில் தமிழ் இலக்கிய விமர்சனம்’ எனும் கட்டுரையில் ஆசிரியர் தெளிவாக்கியுள்ளார்.
மார்க்சிய நோக்கில் இலக்கியத்தை விமர்சிக்கும் நூலாசிரியர், ஈழத்து நவீன இலக்கியத்தில் மார்க்சியத்தின் தாக்கம் குறித்து இன்னும் தெளிவுபடுத்தியிருக்கலாம்.
ஈழத் தமிழ்க் கவிதை மரபைப் பற்றிய ஆய்வு, சற்று மேம்போக்கான ஆய்வாகவே உள்ளது.மொத்தத்தில் இலங்கைத் தமிழ் இனத்தின் வரலாற்றை இலக்கியம் வாயிலாக உலகுக்கு அறிமுகப்படுத்துவதாக உள்ள இந்நூலை அனைவரும் படித்துப் பயன் பெறலாம்.
நன்றி: தினமணி, 19/9/2016.