பாண்டியர் கொற்கை

பாண்டியர் கொற்கை, செ.மா. கணபதி, சங்கத் தமிழ்ப் பதிப்பகம், பக். 412, விலை 250ரூ.

மதுரையை ஆண்ட “அகுதை’ என்ற மரபினரிடமிருந்துதான் பாண்டியர்கள் மதுரையைக் கைப்பற்றினர் என்பதும், முதன்முதலில் கொற்கையில்தான் பாண்டியர்கள் ஆட்சி செய்தனர் என்பதும் பாண்டியர் வரலாறு கூறும் செய்தி. இராபர்ட் கால்டுவெல் என்பவர்தான் பாண்டியரின் கொற்கை பற்றிய ஆய்வினை முதன் முதலில் மேற்கொண்டவர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ள “கொற்கை’ என்னும் சிறிய கிராமம்தான் முன்பு, பாண்டிய அரசர்களின் சிறந்த நகரங்களுள் ஒன்றான கொற்கையாகத் திகழ்ந்தது. இக்கிராமம் குறித்த அறிமுகத்துடன் தொடங்குகிறது பாண்டியர் கொற்கையின் வரலாறு. குறிப்பாக, சங்க காலத்துப் பாண்டிய நாட்டின் சிறந்த தலைநகராகவும், துறைமுகப்பட்டினமாகவும் விளங்கிய இந்தக் கொற்கை மாநகரம், தற்போது ஒரு சிறிய கிராமமாக உள்ளது என்பதை முதல் பகுதி விவரிக்கிறது.

பாண்டிய நாட்டின் சிறந்த கடல்படு பொருள்களுள் ஒன்றான முத்து, கொற்கைத் துறைமுகப்பட்டினத்தையடுத்த கருங்கடலில் எடுக்கப்படுவதால் அதற்குக் “கொற்கை முத்து’ என்று பெயர். “முத்து’ தொடர்பான அனைத்து விவரங்களும் இந்நூலில் உள்ளன. மேலும், கொற்கையோடு தொடர்புடைய அரசியல் வரலாறும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் பதின்மூன்று தலைப்புகளில் கொற்கை, சங்க காலம், களப்பிரர் ஆட்சிக்காலம், முதல் பாண்டியப் பேரரசுக் காலம், பாண்டிய நாட்டில் சோழர் ஆட்சிக்காலம், சோழ பாண்டியர் ஆட்சிக்காலம், இரண்டாம் பாண்டியப் பேரரசு காலம் ஆகியவை வரலாற்றுச் சான்றுகளோடு விளக்கப்பட்டுள்ளன. அரிய பல கூடுதல் தகவல்களுடன் கூடிய மிகச்சிறந்த வரலாற்று ஆவணம்.

நன்றி: தினமணி, 19/9/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *