தமிழர் பண்பாடும் தத்துவமும்
தமிழர் பண்பாடும் தத்துவமும், நா. வானமாமலை, அலைகள் வெளியீட்டகம், பக். 208, விலை 145ரூ.
மார்க்சிய ஆய்வாளரான நூலாசிரியரின் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் அடங்கிய நூல் இது.
வடநாட்டின் ஸ்கந்த வழிபாடு, தமிழகத்தின் முருகன் வழிபாட்டோடு இணைந்தது பற்றிய கட்டுரை, இவ்வுலக இன்பத்தைப் பெறும் பொருட்டே, அதற்காக வேண்டுவதற்காகவே தமிழகத்தில் முருகன் வழிபாடு இருந்ததை பரிபாடலின் மூலம் விளக்கும் கட்டுரை ஆகிய இரண்டும் முருகன் வழிபாட்டின் வரலாற்றை ஆய்வுப்பூர்வமாக விளக்குகிறது.
மனிதனின் உழைப்பு, உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி, உற்பத்தி உறவுகள் ஆகியவற்றின் அடித்தளத்திலேயே கலைகள் தோன்றுகின்றன; வளர்கின்றன; மாற்றம் அடைகின்றன என்பதை நூலாசிரியர் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார்.
இந்தியத் தத்துவமரபில் லோகாயத வாதத்துக்கு முக்கிய இடமுண்டு. எனினும் அது வடநாட்டின் தத்துவ மரபிலிருந்தே ஆராயப்பட்டு வந்தது. ஆனால், இந்நூலாசிரியர் மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தியார் ஆகிய நூல்களின் அடிப்படையில் தமிழ்நாட்டுப் பொருள்முதல்வாதத் தத்துவத்தை ஆராய்ந்துள்ளார்.
தமிழரின் கலை, ஆன்மிகம், தத்துவம் ஆகியவற்றைப் பற்றி வெளிவந்த ஆய்வு நூல்களில் இந்நூல் குறிப்பிடத்தக்க ஒன்று என்பதில் ஐயமில்லை.
நன்றி: தினமணி, 19/9/2016.