தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்

தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம், ஸ்டாலின் ராஜாங்கம், பிரக்ஞை, பக். 176, விலை 145ரூ.

மிழ் சினிமாவைப் பற்றி எத்தனையோ நூல்கள் வெளி வந்திருக்கின்றன. இந்த நூல் குறிப்பிட்ட சில திரைப்படங்களில் இடம்பெறும் காட்சிகளிலும், பேசப்படும் வசனங்களிலும் உள்ள “உண்மைத்தன்மை‘’யை மிகையின்றிப் பதிவு செய்திருக்கிறது.

இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடிவேலுவின் கிராமத்தான், போலீஸ், ரவுடி போன்ற வெற்றிகரமான பாத்திரங்களைப் பற்றிய ஆய்வும், இசையமைப்பாளர் இளையராஜாவின் திறமை பற்றிய பதிவும் இரண்டாவது பகுதியில் அடங்கியிருக்கிறது.‘

பல விதங்களில் வித்தியாசமான படமாக இருந்தாலும் வன்முறைப் பகுதியில் வழக்கமான தமிழ் சினிமாவில் பயணித்த “மெட்ராஸ்’படம் பற்றிய அலசலும், “ஒன்பது ரூபாய் நோட்டு’ படத்தில் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதையை மூன்றாவது பகுதி நினைவூட்டுகிறது. இவை இரண்டையும் விட, தமிழ் சினிமாவின் மறுமலர்ச்சி காலம் என்று சொல்லத்தக்க எண்பதுகளைப் பற்றிய கட்டுரை அடங்கிய முதல் பகுதியே மிகவும் சிறப்பு.

1968-இல் நடந்த கீழ் வெண்மணிச் சம்பவம் பற்றிய பதிவு இடதுசாரி இயக்கத்தின் பிரச்னையாகப் பார்க்கப்பட்டதே தவிர, திராவிட இயக்கத்தின் சமூக நோக்கில் அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதும், ராம. நாராயணன் படங்களில் சிவப்பு அரசியல் பேசப்பட்ட அளவுக்கு, தான் இடதுசாரி என்று கூறிக்கொண்ட மணிவண்ணன் படத்தில் சிவப்பு அரசியல் இடம்பெறவே இல்லை என்பதும் மிகவும் சிந்திக்க வேண்டிய கருத்துகள்.

தேவர் மகனைப் போலி செய்து எஜமான், சின்னக்கவுண்டர் போன்ற படங்கள் வந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரு படங்களுமே தேவர் மகனுக்கு முன்பு வெளிவந்தவை. இப்படி ஓரிரு தகவல் பிழைகள் இருந்தாலும் தமிழ் சினிமா குறித்துத் தமிழில் வந்திருக்கும் முக்கியமான நூல் இது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

நன்றி: தினமணி, 19/9/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *