ஜீன் ஆச்சர்யம்
ஜீன் ஆச்சர்யம், மொஹமத் சலீம், விகடன் பிரசுரம், பக். 216, விலை 140ரூ.
ஜீன் எனப்படும் மரபலகுகளின் விந்தையான செயல்பாடுகள் குறித்து எழுதப்பட்ட அறிவியல் தொடரின் நூல் வடிவம் இது. மனிதர்கள் மட்டுமன்றி, உயிர்கள் அனைத்திலும் ஜீன்களால் ஏற்படும் மாற்றங்கள், அவற்றின் செயல்பாடுகள், ஜீன்களின் பரிணாம வளர்ச்சி என புரிந்து கொள்ளச் சிரமமான அறிவியல் தகவல்களை எளிய தமிழில் விளக்கியுள்ளார் நூலாசிரியர்.
ஆராய்ச்சிதான் வளர்ச்சிக்கு அடிப்படை. “தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை ‘‘ என ஒரு பழமொழி உண்டு. பிறக்கும் குழந்தை தந்தையைப்போல, தாயைப் போல இருக்கிறது என்றால், ஏன் அவ்வாறு இருக்கிறது என பல ஆயிரம் ஆண்டுகளாக அந்தந்த காலகட்டத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்ததன் விளைவே, அவை மரபலகுகளின், அவை உருவாக்கும் மூலக்கூறுகளின் (டிஎன்ஏ) வேலை எனத் தெளிவடைய வைத்துள்ளது.
உச்சகட்டமாக, மனித உடலில் உள்ள 20,500 ஜீன்களில் எந்த ஜீன் என்ன பங்களிப்பை வழங்குகிறது என இப்போது வரையறை செய்ய முடிகிறது என்றால், அது ஆராய்ச்சியின் விளைவுதான். இப்போது உடலில் உள்ள ஜீன்களைப் பரிசோதனைக்குட்படுத்தி, என்ன மாதிரியான நோய்கள் வரக்கூடும் என்று முன்கூட்டியே கண்டறிந்து, அதற்குத் தயாராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அளவுக்கு இந்த ஜீன் ஆராய்ச்சி மேம்பட்டுள்ளது. அத்தகைய ஜீன்கள் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்துவதற்கு இந்த நூல் உதவுகிறது.
மனிதர்களை உள்ளடக்கிய முதுகெலும்புள்ள பிராணிகள் மற்றும் ஏனைய ஜீவராசிகளான- புழு, பூச்சிகள் போன்ற சிறிய உயிர்கள் ஆகியவற்றுக்கு இடையேயான மரபியல் மூலக்கூறுகள் கிட்டத்தட்ட ஒன்றுதான்; புரதக் கட்டமைப்புகள்தான் வேறுபடுகின்றன என்பதுபோன்ற பல வியக்கத்தக்க தகவல்கள், ஆர்வத்துடன் படிக்கும் சுவாரசியத்தை ஏற்படுத்துகின்றன.
கட்டுரைகளுக்கு வலு சேர்க்கும் புகைப்படங்கள், அறிவியல் வார்த்தைகளுக்கு இணையான எளிய தமிழ் வார்த்தைகள் என நிறைவான வாசிப்பைத் தருகிறது இந்நூல்.
தினமணி, 3/10/2016.