கவிஞராக
கவிஞராக, அ.கி. பரந்தாமன், அல்லி நிலையம், பக். 342, விலை 135ரூ.
தமிழில் இலக்கியம், இலக்கணம், வரலாறு என அனைத்து நிலைகளிலும் நுண்மாண் நுழைபுலம் மிக்கவரான நூலாசிரியர், தன் மாணாக்கர்களுக்கு கவிதை படைக்கும் ஆற்றலை வளர்க்க கற்பித்ததன் அடிப்படையில் இந்நூல் உருவாக்கம் பெற்றுள்ளது.
பொது இயல், உறுப்பியல் போன்ற ஒன்பது தலைப்புகளிலும், முப்பத்தைந்து உள் தலைப்புகளிலும் கவிதையை, அதன் உருவாக்கத்தை நூலெங்கும் விளக்கியுள்ளார்.
யாப்பிலக்கணத்தை மையமாக வைத்து கவிதை உருவாக்குவதன் அவசியத்தைமுக்கியமாகக் கூறியுள்ள நூலாசிரியர், புதுக்கவிதை இலக்கணமற்றது என்பதை மறுக்கிறார்.
யாப்பிலக்கணம் அக்காலம் முதல் இக்காலம் வரை கவிதையில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதையும், அதற்கான காரணங்களையும் யாவரும் புரியும் வகையில் சுட்டிக்காட்டியிருப்பதும் சிறப்பாகும்.
தமிழரின் சிந்தனைகள், கருத்துகள் காலங்கடந்து நிலைத்து நிற்க வேண்டும் எனில், உரைநடையை விட பாடலே சிறந்த ஊடகம் என்பதை நூலாசிரியர், தமிழ் இலக்கியத் தோற்றம் முதல் நவீன தமிழ் மொழி வளர்ச்சி வரை அலசி ஆராய்ந்து முடிவு கண்டிருக்கிறார்.
புதுக்கவிதை எழுதுவோருக்கும் தொல்காப்பியம் வழிகாட்டியிருப்பதை, “புதுவது புனைந்த யாப்பின் மேற்றே’ எனும் அதன் சூத்திரம் வழிநின்று விளக்கியுள்ளார்.
இளங்கவிஞர்களுக்கு தனது அறிவுரையாக வெண்பா, ஆசிரியப்பா, அறுசீர் விருத்தம், பன்னிருசீர் விருத்தம் மற்றும் சிந்து வகைகளில் பயிற்சி பெறுவது அவசியம் என்கிறார் நூலாசிரியர்.
மொத்தத்தில் “கவிஞராக’ எனும் இந்த நூலானது தமிழ், தமிழ்க் கவிதை, இலக்கணம் என ஒட்டுமொத்த மொழி வரலாற்றுடன், படிப்போரை தரமிக்க தமிழ்க் கவிஞராக்கும் இலக்கணத்தைக் கற்றுத் தரும் அற்புதமான நூலாக இது இருக்கிறது என்றால், அது மிகையில்லை.
தினமணி, 3/10/2016.