காரேய் கருணை இராமாநுஜா
காரேய் கருணை இராமாநுஜா, வேதா டி. ஸ்ரீதரன், வேதா ப்ரகாசனம், பக். 192, விலை 150ரூ.
வைணவ ஆசார்யார்களுள் மிகவும் முக்கியமானவர் ஸ்ரீராமாநுஜர். அவர் ஒரு புரட்சியாளர் என்று சிலரும், சமூக சீர்திருத்தவாதி என்று சிலரும், மதமாற்றத்தில் ஈடுபட்டவர் என்று சிலரும், ஸ்ரீரங்கம் கோயிலில் பாரம்பரியமாக நடைபெற்று வந்த வழிபாட்டு முறைகளை மாற்றியவர் என சிலரும், அவர் ஒரு வறட்டு வேதாந்தியே தவிர சிறந்த பக்திமான் அல்ல என்று சிலரும், வேத மரபுக்கே விரோதமானவர் என்று சிலரும் அவர் மனைவியைப் பிரிந்தது நியாயமல்ல என்று சிலரும், அவர் வாதப்போர் புரிந்தவர் என்று சிலரும் கூறி வருகின்றனர். இந்த எல்லா கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் இந்நூலில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீராமாநுஜரின் வாழ்க்கை வரலாறு, அவருடைய திருப்பணிகள், அவர் பயணம் செய்த தலங்கள், அவர் எழுதிய நூல்கள், அவரைப் பற்றிய நூல்கள், அவருடைய வேறு பெயர்கள், அவருடைய முக்கிய சீடர்கள், அவருடைய கடைசி உபதேசம் போன்ற பல தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, திருக்கோஷ்டியூர் நம்பி ஸ்ரீராமாநுஜருக்கு உபதேசித்தது சரம ஸ்லோகமே தவிர எட்டெழுத்து மந்திரமல்ல என்பதும், ஸ்ரீரங்கம் கோயில் வழிபாட்டு முறைகளை ஸ்ரீராமாநுஜர் ஏன் மாற்ற நேர்ந்தது என்பதற்கான விளக்கமும் அருமை; பலர் அறியாதவை.
ஸ்ரீராமாநுஜரைப் பற்றிய நூலாக இருந்தாலும் நடுநடுவே வைணவத்தின் சிறப்பு, பஞ்ச ஸம்ஸ்காரம், சடாரி சாதிப்பது போன்ற பல அரிய தகவல்கள் சேர்க்கப்பட்டிருப்பது சிறப்பு. பல ஊர்களிலுமுள்ள ஸ்ரீராமாநுஜரின் படங்கள் நூலுக்கு மேலும் அழகு கூட்டுகின்றன. வைணவம் குறித்தும் ஸ்ரீராமாநுஜர் குறித்தும் தெளிவாக அறிய உதவும் அரிய நூல்.
தினமணி, 3/10/2016.