இதய ஒலி என் வாழ்க்கை அனுபவங்கள்
இதய ஒலி என் வாழ்க்கை அனுபவங்கள், பழனி ஜி. பெரியசாமி, வானதி பதிப்பகம், பக். 420, விலை 350ரூ.
வாழ்வில் திட்டமிட்டு உழைத்து, உயர்ந்த சிகரங்களை எட்டியவர்களின் தன்வாழ்க்கை வரலாற்று நூல்கள், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்குபவை. அந்த வகையில், அமெரிக்கா வாழ் இந்தியரான டாக்டர் பழனி ஜி. பெரியசாமியின் வாழ்க்கை மிகவும் குறிப்பிடத் தக்கதாகும்.
நாமக்கல்லில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கல்வி வேட்கையால் உந்தப்பட்டு பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற அமெரிக்கா சென்ற பெரியசாமி, அங்கேயே கல்வியாளராக மாறினார். இருந்தபோதும் தாய்மண் மீதான பாசம் விட்டுப் போகாமல், நாமக்கல்லில் பிஜிபி கல்வி நிறுவனங்களை உருவாக்கினார். நட்சத்திர விடுதிகள், சர்க்கரை ஆலை ஆகியவற்றை அமைத்து தொழிலதிபராகவும் உயர்ந்தார்.
அவரது வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது, தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருடனான சந்திப்பு. அவர் உடல்நலம் குன்றி சிறுநீரக நோயால் அவதிப்பட்டபோது, அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று சிறப்பான சிகிச்சை பெறச் செய்தவர் பெரியசாமி. அவரது சுயசரிதையில் இடம்பெற்றுள்ள அந்தக் காலகட்ட நிகழ்வுகளைப் படிக்கும்போது, மிகுந்த வியப்பேற்படுகிறது.
இந்நூலில் பெரியசாமியின் வாழ்க்கை மட்டுமல்லாது, சமகாலத்திய அரசியல், சமூக, பொருளாதார நிகழ்வுகளும் பதிவாகி இருக்கின்றன.
தனது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது பிரமிப்பாக உணர்வதாக நூலாசிரியரே கூறும்போது, அதைப் படிக்கும் நமக்கு ஆச்சரியம் ஏற்படுவது இயல்பானதே. அவரது நேர்மை, காலம் தவறாமை, திட்டமிட்ட அணுகுமுறை, செயல் நேர்த்தி, மொழிப்புலமை, கல்வித்திறன் ஆகியவையும், பெற்றோரால் அவரிடம் விதைக்கப்பட்ட ஒழுக்கமும் தான், அவரை சிறந்த அமெரிக்க இந்தியராக உருவாக்கி இருக்கின்றன எனில், அது மிகையில்லை.
ஒவ்வோர் இளைஞனும் படிக்க வேண்டிய அற்புதமான நூல் இது.
தினமணி, 3/10/2016.