நிம்மதி

நிம்மதி, இடைமருதூர் கி. மஞ்சுளா, கலைஞன் பதிப்பகம், பக். 168, விலை 180ரூ.

இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து மலேசியாவில் வெளியிடப்பட்ட இந்தச் சிறுகதைத் தொகுப்பில் 22 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.

ஓடும் ரயிலில், ரயில் நிலையத்தில் காத்திருக்கும் போது, பேருந்தில், ஆட்டோவில், மருத்துவமனையில், நெடுந்தூர ரயில் பயணத்தில்… ஏன், கனவில் கூட தன்னைச் சுற்றி நிகழ்ந்த – நிகழ்கின்ற நிகழ்ச்சிகளைக் கதைக் கருவாக்கியுள்ளார் நூலாசிரியர்.

தற்கால இளைஞர்களின் சுயநலப் போக்கை “சூளை’ சிறுகதை படம் பிடித்துக் காட்டுகிறது. “நிம்மதி’ சிறுகதையின் முடிவில், எட்டாவது படிக்கிற
பிஞ்சுக் குழந்தையாட்டம் இருக்கிற வாணியின் இளம் வயது திருமணம் நின்று போகிறது. இன்றைய நவீன யுகத்தில் இதுபோன்ற திருமணங்கள் நிஜத்தில் நிறைய நடந்தே விடுகின்றன.

திருமணமாகி மூன்றே ஆண்டுகளில் கணவனை இழந்த ராசியும், ஐம்பது வயதைக் கடந்தவரும் ரகசிய காதல் வயப்படும் கதை “உயிர் வலி’. ரகசியக் காதலரின் மரணத்துக்கு அவளது ஓலம், “அப்பா இறந்தப்பக் கூட இவள் இப்படி அழலையே …” என்று உடன் பிறந்தவளை விமர்சிக்க வைக்கிறது.

நினைவின் வலியைத் தாங்க முடியாத ராசி, கங்கையில் இறங்கி விடுகிறாள். நம் வாழ்க்கை விடை காண முடியாத புதிர் என்பதை இக்கதை உணர்த்துகிறது. “சிலருடைய அனுபவத்தின் மீது கற்பனை சாயம் பூசப்பட்ட உருவம்’‘ என்ற நூலாசிரியரின் வாசகத்தை மெய்ப்பிப்பதாகவே தொகுதியில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் அமைந்துள்ளன.

நன்றி: தினமணி, 10/10/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *