நூறு வடமொழிக் கதைகள்
நூறு வடமொழிக் கதைகள், பத்ம சாஸ்திரி, தமிழில் அலமேலு கிருஷ்ணன், சாகித்திய அகாதெமி, பக். 256, விலை 150ரூ.
வடமொழிக் கதைகள் என்பதை சம்ஸ்கிருத கதைகள் என்று புரிந்து கொண்டு படித்தாலும், இந்தக் கதைகள் எந்த வட்டத்துக்குள்ளும் பொருந்தவில்லை. மரபுவழிக் கதைகளா, நீதிக்கதைகளாக, புனைவுகளா, வேற்றுமொழிக்கதைகளா, பஞ்ச தந்திர கதைகளின் மாற்றுருவா? எதையும் நூலாசிரியர் சொல்லவே இல்லை. வாசகனே அவரவர் வாசிப்பின் பரப்புக்கேற்ப தீர்மானித்துக் கொள்ள வேண்டியதுதான்.
நூறு கதைகளில் அதிகபட்சமாக 4 கதைகளை “நன்று‘’ எனச் சொல்லலாம். குறிப்பாக, “இரும்பு வியாபாரி”, “அரசனின் பாவம் குடிமக்கள் தலையில்’‘ ஆகிய இரண்டு கதைகள் நிறைவானவை.
முன்னொருகாலத்தில் ஓர் அரசன்…..என்று ஆரம்பிக்கும் கதைகள் சில, சிங்கமும் மனிதனும் நண்பர்களாக இருக்கும் கதைகள் சில. பிசாசுகள் வரும் கதைகள் சில. ரயிலில் பயணிக்கும் கதாநாயகன் கூட இந்தக் கதையில் வருகின்றான். புத்தகத்தில் ஆப்ரிக்க, மலேசியா, ரஷ்யா, திடீரென மந்திரவாதி, பேசும் விலங்குகள் என எல்லாமும் வருகின்றன.
இதில் ஆஸ்கர் வைல்டு எழுதிய “தி ஷெல்பிஷ் ஜெயன்ட்’‘ கதையின் மொழியாக்கம் (34வது கதை) “சுயநலமான அரக்கன்’ என்ற தலைப்பில் அப்படியே இடம்பெற்றிருக்கிறது. இது எந்த வகையில் நியாயம்?
2010ஆம் ஆண்டு பால சாகித்ய விருது பெற்ற “சம்ஸ்கிருத கதாசதகம்’‘ நூலின் தமிழாக்கம் இது.
நூலாசிரியர் பத்ம சாஸ்த்ரி ராஜஸ்தான் மாநில கல்வித்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். சோவியத் நாடு நேரு விருது பெற்றவர். சாகித்திய அகாதெமியின் தேர்வுக்குழுவில் செல்வாக்கு உள்ளவர் எழுதிய நூலுக்கு விருது கிடைக்கும் என்பதை வாசகர்களுக்கு அம்பலப்படுத்த இந்த மொழியாக்கம் உதவுகிறது. மகிழ்ச்சி.
நன்றி: தினமணி, 10/10/2016.