ஆலை அரசர் கருமுத்து தியாகராசரின் உரைக்கோவை
ஆலை அரசர் கருமுத்து தியாகராசரின் உரைக்கோவை, தொகுப்பாசிரியர் க.ஹரி தியாகராசன், வானதிபதிப்பகம், பக்.296, விலை ரூ.200.
பண்பாட்டு நகரமாம் மதுரையில் கல்விச் சேவையுடன் தமிழ் தொண்டாற்றிய கருமுத்து தியாகராசரின் சொற்பொழிவுகள் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
தியாகராசர் வெவ்வேறு விழாக்களில் ஆற்றிய உரைகளை கல்வி, இலக்கியம், ஆலை, மாநாடுகள், சங்கங்கள், பொது நிகழ்வுகள், வானொலி மற்றும் மகாத்மா காந்தி, ராஜாஜி ஆகியோருக்கு அவர் எழுதிய கடிதங்களும் சேர்க்கப்பட்டு மொத்தம் 37 கட்டுரைகளாகத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
தேவகோட்டை தமிழிசைப் பள்ளியில் பேசிய தியாகராசர், இசை என்றால் என்ன? அதன் வளர்ச்சி, சிவபெருமானுடன் இசைக்குரிய தொடர்பு என மிகப்பெரிய இசை ஆய்வை மேற்கொண்டு பேசியிருப்பதை அறியும் போது வியப்பாக உள்ளது.
வள்ளலார் குருகுல திறப்பு விழாவில் வள்ளலார் குறித்தும், வடலூரின் சிறப்பையும் கூறுவது, குருகுலங்களின் சிறப்புக்காக ராமபிரானின் குருகுல வாழ்க்கையை எடுத்துரைத்து, கம்பரையும் தனது உரையில் சுட்டிக்காட்டியிருப்பதன் மூலம் தியாகராசரின் இலக்கியத் திறனை நம்மால் அறிய முடிகிறது.
தியாகராசர் காந்திக்கு எழுதிய கடிதம், தியாகராசரின் தாய்மொழிப் பற்றையும், காந்தியடிகள் மொழிக் கொள்கையில் தடுமாற்றத்துடன் இருந்ததையும் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.
மதுக்கொள்கையில் எத்தகைய நிலையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை காந்தியடிகளுக்கு தியாகராசர் எழுதிய கடிதத்தின் மூலம் அறிய முடிகிறது.
அப்போதைய சென்னை மாகாண முதல்வரான ராஜாஜிக்கு தியாகராசர் எழுதிய கடிதத்தில் காந்தியடிகளை ஆதரித்ததால் அவருடைய தொழிலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும், ஹிந்தியைக் கட்டாயமாக்கியதால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சுட்டிக்காட்டியிருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. 1947 தொடங்கி 1965 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் தமிழகத்தின் சூழலை அனைத்து நிலைகளிலும் தெளிவாக விளக்கும் வகையில் நூல் அமைந்திருப்பது சிறப்பு.
நன்றி: தினமணி, 30-1-2017.