தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள்
தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள், பின்னலூர் மு.விவேகானந்தன், நர்மதா பதிப்பகம், பக். 304, விலை 150ரூ.
வழக்குரைஞர்களாகவும், நீதிபதிகளாகவும் பணியாற்றிய சிலர், இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் ஏற்றம் தந்திருக்கிறார்கள். அந்த வகையில், இலக்கிய தமிழ், இலக்கணத்தமிழ், சங்கத்தமிழ், சமயத்தமிழ், அறிவியல் தமிழ், சட்டத்தமிழ், வரலாற்றுத் தமிழ், மொழிபெயர்ப்புத் தமிழ், பதிப்புத் தமிழ், ஆய்வுத் தமிழ் மொழியியல் ஆட்சித் தமிழ் முதலிய பல்வேறு தளங்களில் தமிழ் வளர அரும்பாடுபட்டவர்கள். அவர்களுள் 34 பேரைப் பற்றியும், அவர்கள் செய்த தமிழ்த்தொண்டுகளைப் பற்றியும் இந்நூல் விளக்குகிறது.
சிறுகதையின் முன்னோடியாகத் திகழ்ந்த வ.வே.சு.ஐயர், பழந்தமிழ்ச் சுவடிகளைப் பதிப்பித்த சி.வை.தாமோதரம்பிள்ளை, அறிவியல் தமிழ் வளர்த்த பெ.நா.அப்புசாமி, நாடகத் தமிழ் வளர்த்த பம்மல் சம்பந்த முதலியார், கவிதைத்
தமிழ் வளர்த்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தமிழின் சிறப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்த மு.சு.பூர்ணலிங்கம் பிள்ளை, மொழியியலை வளர்த்த அறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம், தமிழ் வரலாறு படைத்த கே.எஸ்.சீனிவாசம் பிள்ளை, சட்ட நூல்களைத் தமிழில் தந்த கா.சுப்பிரமணிய பிள்ளை, ஆய்வுத் தமிழறிஞர் எஸ்.வையாபுரிப் பிள்ளை, இசைத்தமிழ் வளர்த்த ஆர்.கே.சண்முகம் செட்டியார், சமயத் தமிழ் வளர்த்த கே.எம்.பாலசுப்பிரமணியம், சட்டத்தமிழ் வளர்த்த நீதியரசர் எஸ்.மகராஜன், சட்டமன்றத் தமிழ் வளர்த்த மா.சண்முக சுப்பிரமணியம், வட்டத்தொட்டி வைத்துத் தமிழ் வளர்த்த ரசிகமணி டி.கே.சி., போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
34 வழக்குரைஞர்களின் வாழ்க்கை வரலாறு, சுவையான நிகழ்ச்சிகள், அவர்களின் தமிழ்த்தொண்டு, அவர்கள் கடைப்பிடித்த கோட்பாடுகள், எழுதிய நூல்கள் என அனைத்தும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல்.‘
நன்றி: தினமணி, 6/3/3017.