நல்ல தமிழ் எழுத வேண்டுமா?
நல்ல தமிழ் எழுத வேண்டுமா? , அ.கி. பரந்தாமனார், அல்லி நிலையம், பக்:496, விலை ரூ160.
நாம் அன்றாடம் நாளேடுகளில் படிக்கும் செய்திகள் மற்றும் கதை, கவிதை, கட்டுரை முதலியவற்றில் ஏதேனும் சில பிழைகள் கண்களில் படக்கூடும். சில செய்திகளில் உள்ள சொற்றொடர்கள் சரியா, தவறா என்ற குழப்பம் ஏற்படும். நாம் சரி என நினைப்பதும், தவறு என நினைப்பதும் சரிதானா என்பதை எப்படி உறுதி செய்து கொள்வது? அதற்கு உதவுவதுதான் இந்நூல்.
கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய அ.கி. பரந்தாமனார் ஒரு நாளேட்டில் வாரம் ஒருமுறையென தொடர்ந்து நான்கு வருடங்கள் எழுதியதன் தொகுப்பே இந்நூல்.
இதில் தமிழ்மொழி குறித்த சுருக்க அறிமுகம், உரைநடை வளர்ந்த விதம், எழுத்தியல், சொல்லியல், வினையியல், இடையியல், உரியியல் போன்றவற்றுக்கான தனித்தனி விளக்கங்கள், வலி மிகுதல், சந்தி விதிகள், வாக்கிய வகைகள், நிறுத்தக் குறிகள், பொருளணிகள் – இப்படித் தமிழின் எல்லாப் பிரிவுகள் குறித்தும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துகள், முதலில் வராத எழுத்துகள், இடையில் வராத எழுத்துகள், சொல்லுக்கு இறுதியில் வராத எழுத்துகள் போன்றவை எளிய உதாரணங்களோடு விளக்கப்பட்டுள்ளன. மேலும் முதல் வேற்றுமை முதல் எட்டாம் வேற்றுமை வரை உதாரணத்தோடு விளக்கியிருப்பது எழுத்தாளர்களுக்கே மிகவும் பயன்படக்கூடியது.
பொதுவாக இலக்கணங்களை விளக்கும் நூல்கள் எளிமையாக இருப்பதில்லை. ஆனால் இந்நூல் ஒரு விதிவிலக்கு.
நன்றி: தினமணி, 5/6/2017.