மாணவர்களுக்கான தமிழ்

மாணவர்களுக்கான தமிழ், என்.சொக்கன்,  கிழக்கு பதிப்பகம், பக்.232, விலை ரூ.200.

ஆங்கிலவழியில் பயில்வது இன்று அதிகமாகிவிட்டதால், தமிழில் எழுதும்போது பல ஐயங்கள் தோன்றுவது இயல்பானதே. அதிலும் இன்று நாம் பயன்படுத்துகிற பல சொற்களைத் தவறாகவே எழுதிக் கொண்டிருக்கிறோம். அவற்றைச் சரியென்றும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்நூல் அப்படிப்பட்ட ஐயங்களைத் தீர்த்து வைக்கிறது. தேநீர், தேனீர் இவற்றில் எது சரி? எண்ணெய் சரியா? எண்ணை சரியா? ஐம்பத்து ஏழு என்று குறிப்பிடுவது சரியா? ஐம்பத்தி ஏழு என்பது சரியா? சென்னை பட்டணம், நாகப்பட்டினம் என்று சொல்கிறார்களே… பட்டணத்துக்கும் பட்டினத்துக்கும் என்ன வேறுபாடு? பட்டணத்தை எந்த இடத்தைக் குறிக்கப் பயன்படுத்த வேண்டும்? பட்டினத்தை எந்த இடத்தைக் குறிக்கப் பயன்படுத்த வேண்டும்? இவ்வாறு ஏகப்பட்ட ஐயங்களைத் தெளிவுபடுத்துகிறது இந்நூல்.

நடு ராத்திரியை நள்ளிரவு என்கிறோம். நடுப்பகலை நண்பகல் என்று ஏன் சொல்கிறோம்? என்பதை இந்நூல் எளிமையாக விளக்குகிறது.

இந்நூலைப் படிக்கும்போது தமிழ் இலக்கணத்தை இதைவிடவும் எளிமையாக யாராலும் கற்றுத் தர முடியாது என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

நன்றி: தினமணி, 26/6/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *