இரண்டு வருடங்கள் எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள்

இரண்டு வருடங்கள் எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள், சல்மான் ருஷ்தீ, தமிழில் சா. தேவதாஸ், எதிர் வெளியீடு, பக். 352, விலை 320ரூ.

நம் உலகம் அறிவற்றதின் காலத்திற்குள்ளே மூழ்கி இருந்துள்ளதை இந்த நூல் விவரிக்கிறது. பல அடுக்குகள் மிக்கதும், வசீகரமானதாயும் உள்ள நாவல் இதுவாகும். மிகச் சிறந்த நாவல். ஆசிரியர் சல்மான் ருஷ்தீயின் சாதனைப் படைப்பாகும்.

ருஷ்தீ நம் காலத்தின் மகத்தான கதை சொல்லி என்று, ‘நியூயார்க் டைம்ஸ்’ பாராட்டியுள்ளது. ஆங்கிலத்தில் எழுதிய நாவலை சா.தேவதாஸ் மிகச் சிறந்த முறையில் தமிழில் வெளியிட்டுள்ளார். நூலின் பெயரே வசீகரமும், புதிர் தன்மையும் உடையதாகும். 2 வருடம், 8 மாதம், 28 இரவுகள் இவற்றைக் கூட்டினால், 1,001 இரவுகள் வரும்.

இந்த நாவல் தோன்ற, 1,001 இரவுகள் ஆதரமாய் இருந்திருக்கின்றன. நாவலின் உட்தலைப்புகள்: இபின் ரஷித்தின் குழந்தைகள், திரு ஜெரோனிமோ, தத்துவ ஆசிரியர்களின் இணக்கம் இன்மை, வினோதத்தன்மை, எவ்வளவு காலம் அவர் பெற்றிருந்தார்.

மிகப் பெரிய ஜுமுருத்தும் அதன் மூன்று சகாக்களும், திரும்பவும் சாதலில் துனியா, தலையணைகள் விரிப்புகள் சீனப் பெட்டிக்குள், அலை திரும்பத் தொடங்குவது எதிலிருந்து, தேவதை அரசி ஆகிய தலைப்புகளில், நாவல் திடுக்கிடும் தகவல்களுடன், விரிந்து செல்கிறது.

நூலாசிரியரின் உள்ளக் கருத்தை அப்படியே உள்வாங்கிக் கொண்டு, மொழிபெயர்ப்பு ஆசிரியரின் கருத்து கண்ணாடியில் தோன்றும் உருவம் போல வெளியிட்டுள்ளார்.

ருஷ்தீயிடம் ஓர் அரிய நுட்பம் காணப்படுகிறது. அந்நியப் பண்பாட்டை விவரிக்கையில் அதன் அடையாளத்தைக் கண்டு விடுவார். கிரேக்க மரபில், வெள்ளை அல்லி மலர் மறுபிறவிக்கான, புத்துயிர்ப்புக்கான அடையாளம் (பக்.8) நம்பிக்கை யூட்டும் குறியீடு.

இந்த நாவலில் மரணம் பற்றிப் பேசும்போது, வெள்ளை அல்லி மலர்களை கதாபாத்திரம் பார்ப்பதாக எழுதியுள்ளார். நூலின் நிறைவுரையில் நாம் ஆனந்தமாய் இருக்கிறோம் பகலில், (பக்.352). ஆனால், இரவுகள் ஊமைகளாய்க் கடக்கின்றன.

ஆயிரத்து ஓர் இரவுகள் கடக்கக்கூடும் ஆவிகளின் படையென, நாவலுக்கே உரிய கற்பனை கலந்து நாவலை முடித்துள்ளார். நல்ல பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த, கற்பனை கலந்த நாவலாகும்.

– பேரா., ஆர்.நாராயணன்.

நன்றி: தினமலர், 18/6/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *