தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம்

தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம், இரா. இளங்குமரனார், தமிழ்ப்பேராயம் திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், பக். 384, விலை 200ரூ.

தமிழ்மொழியில் மிகப்பழமையான இலக்கணநூலான தொல்காப்பியத்துள் விளங்கும் கலைச்சொற்களும், அவற்றுக்கு அடியாக விளங்கும் சொற்களும் அகரவரிசையில் தொகுக்கப்பட்டு, பொருள் அளிக்கப் பெற்றுள்ளதாக இந்நூல் அமைந்துள்ளது.

தமிழில் எழுத்து, சொற்களைக் கற்றவர் யாவரும் அறியும் வகையில், தொல்காப்பியம் எளிய நூலாக இருப்பினும், அதில் உள்ள கலைச்சொற்களை அறிந்து கொண்டால், அதை நன்கு உணர்ந்து கற்க இயலும் என்ற நோக்கில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

நூலில் தொல்காப்பியத்தில் விளங்கும் கலைச்சொற்கள் அகரவரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. இவை தலைப்புச் சொற்களாக விளங்க, அதன் அருகில் அச்சொல் பிரிக்க வேண்டிய பிரிப்பும், அதன் அமைவு முறையும் கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் அச்சொல் இடம்பெற்ற நூற்பா எண்ணும் -அச்சொல் திரிபு உற்றதாயின் திரிபும், மக்கள் வழக்கில் இருப்பின் அதன் விளக்கமும், ஒப்புநோக்கும் எடுத்துக்காட்டும் தரப்பட்டுள்ளன. ஒப்புடைய சொல்எனின், ‘இச்சொல் காண்க’ என்னும் குறிப்பும் கொண்டு அமைக்கப் பெற்றுள்ளது. (எ.கா.,) அவையல் கிளவி-அவை +அல்+கிளவி=அவையல் கிளவி.

சான்றோர் அவையில் சொல்லக்கூடாத சொல். பொதுவாக நல்லோர் வாயில் அல்லசொல் தோன்றாது. இடக்கரடக்கு என்பது பின்னை வழக்கு. (ப.45)இலக்கியச் சான்று மட்டுமன்றி சில சொற்களுக்கு இலக்கணச் சான்றும் காட்டப்பட்டுள்ளன. (எ.கா.) ‘சுருக்கம்’ என்னும் சொல்லுக்கு ‘விரிந்தகேள்வி ‘‘சுருக்கமில்கேள்வி’’ -(யா.கா. 2)’ என யாப்பருங்கலக்காரிகை சான்று காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு கலைச்சொல்லுக்கும் அளிக்கப்பட்டுள்ள பொருள் விளக்கமும், எடுத்துக்காட்டுகளும் படிக்கச் சுவை பயப்பதாய், ஒரு அகராதி என்னும் எண்ணத்தைத் தாண்டி, அதில் ஈடுபாடு உண்டாகச் செய்கின்றன.
எளிமையும், தெளிவும் அமைந்த நூலாய், ஓரளவு கற்றாரும் எளிதில் தொல்காப்பியத்தை அறியும் படியாக அமைக்கப்பட்டுள்ள இந்நூல், கற்றாரிடத்தும், கற்போரிடத்தும் பெரும் வரவேற்பைப் பெறும் என்பதில் ஐயமில்லை.

– முனைவர் இரா. பன்னிருகை வடிவேலன்.

நன்றி: தினமலர், 11/6/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *