நானும் எனது நிறமும்

நானும் எனது நிறமும், ஓவியர் புகழேந்தி, தோழமை வெளியீடு, விலை 350ரூ.

காலத்தின் பதிவு,

நானும் எனது நிறமும் என்ற தலைப்பில் ஓவியர் புகழேந்தி தன் வரலாறு எழுதியுள்ளார். நாலு கி.மீ. தூரம் தினமும் நடந்து சென்று படித்துக் காலையிலும் மாலையிலும் தோட்ட வேலைகள் செய்து,தனக்குப் பிடித்தது ஓவியப்படிப்பு தானென்பதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, அதைப் படிக்க ஏற்பட்ட எதிர்ப்பையும் மீறி அதில் பட்டப்படிப்பு முடித்து முதுநிலைப் பட்டமும் பெற்று இன்று சமூக உணர்வும் தமிழுணர்வும் கொண்ட ஓவியனாய் உயர்ந்து நிற்பதைக் கோர்வையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் ஓவியர் புகழேந்தி.

ஓவியப்போட்டியில் முதல் பரிசு பெற்றாலும், பேச்சுப் போட்டியிலும் கட்டுரைப் போட்டியிலும் பங்கெடுத்துப் பரிசு பெறாததையும் எழுதியிருப்பதோடு தன் தந்தை மற்றும் ஆசிரியர்கள் மீது கொண்டிருந்த நன்மதிப்பு அவர் எழுத்துக்களில் புலப்படுகிறது.

சிறுவயதில் அம்மா கொடுத்த காசில் வாங்கிய முதல் வண்ணம் பல நாடுகளில் வண்ணம் வாங்கினாலும் மறக்க இயலாதது என்று எழுதியிருப்பதே தன் வரலாறின் சுருக்கமாகத் தெரிகிறது. ஓவியக் கல்லூரி மாணவனாகவே ஈழப்போராட்ட உணர்வுகளில் ஒன்றியவராக வளர்ந்த புகழேந்தியை அவர் எழுத்துக்களில் காண முடிகிறது.

20 வது வயதிலேயே தேசிய விருது பெற்ற, அரசுப்பணி நியமன ஆணை பெற்றது போன்ற முக்கிய நிகழ்வுகளை நெகிழ்வாகவும் சமயங்களில் நகைச்சுவையுடனும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஐதராபாத்தில் முதலிடம் பெற்றும் மேல்படிப்பில் சேர ஏற்பட்ட தடை, மண்டல் குழு ஆதரவுப் போராட்டம், எழுத்தாளன் ஆனது, மதவாதத்திற்கு எதிரான நிலை, ஆந்திரத்தில் சுண்டூர் படுகொலை, காந்தி பேரனின் உணர்வுப் பூர்வமான பாராட்டு, தலைமுடி பாணி மாற்றம், இன்குலாப், காசி ஆனந்தன் போன்ற முற்போக்காளர்களின் தோழமை, குஜராத் நிலநடுக்கம் என இவர் வளரும் காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளையும் தன்னையும் இணைத்து எழுதியுள்ளார்.

அமெரிக்க ஐரோப்பிய ஈழப் பயணங்கள், புலித் தலைவர் பிரபாகரன் அவர்களுடனான உணர்வுப்பூர்வமான ஈடுபாடு, ஈழம் மற்றம் வெளிநாடுகளில் ஓவியக்கண்காட்சி, எம்.எஃப் ஹுசைனின் வாழ்க்கை வரலாறு எழுதியது என தன்னோடு இணைந்த ஓவியம், குடும்பம், சமூகம், ஈழம், உலகம் என சிறப்பாகத் தன் வரலாற்று நூல் எழுதியுள்ளார்.

நன்றி: அந்திமழை,ஜுலை, 2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *