எமகாதக எத்தர்கள்
எமகாதக எத்தர்கள், ஹரி கிருஷ்ணன், கிழக்கு பதிப்பகம், பக்.152 , விலை ரூ.140.
பிறரை ஏமாற்றுவதற்கும் திறமை வேண்டும். இந்த நூலில் அப்படிப்பட்ட திறமைசாலிகளின் சாகசக் குற்றச் செயல்கள் விறுவிறுப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வெளிவந்ததன் நூல் வடிவம் இது.
பிரான்சின் ஈபில் டவரை விலை பேசி விற்பது, கள்ளநோட்டுகளை அச்சடித்துப் புழக்கத்தில் விடுவது போன்ற சாகசமான குற்றச் செயல்களைச் செய்த விக்டர் லுஸ்டிக் என்பவனைப் பற்றிய தகவல்கள் அதிகம்.
அதுபோன்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளிடம் புரூக்ளின் பாலத்தை விற்ற ஜார்ஜ் சி பார்க்கரின் சாகச குற்றச் செயல்களாக இந்நூலில் குறிப்பிடப்படுபவையும் அதிகம்.
ஈராக்கின் மீது அமெரிக்கா போர் தொடுத்து அதிபர் சதாம் உசேனைக் கொன்றது. பேரழிவுக்குக் காரணமான நுண்ணிய உயிரியல் ஆயுதங்களை ஈராக் தயாரித்ததாலேயே போர் தொடுத்ததாக அமெரிக்கா சொன்னது. ஆனால் போரின் இறுதியில் ஈராக்கில் அப்படி எதுவும் தயாரிக்கப்படவில்லை என்று அமெரிக்காவே ஒத்துக்கொண்டது. ஈராக்கில் நுண்ணிய உயிரியல் ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக அமெரிக்காவை நம்ப வைத்தது, அல்ஜனாபி என்பவன்தான். ஜெர்மனியில் குடியுரிமை பெறுவதற்காக அவன் அந்தப் பொய்யைச் சொன்னானாம்.
இந்நூலைப் படிக்கும் இளையதலைமுறையினர், நூலில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த சாகசக் குற்றவாளிகளை ஹீரோக்களாக கருதக் கூடாது என்பது மிகவும் முக்கியம். நூலின் விறுவிறுப்பு இதைச் சொல்லத் தூண்டுகிறது.
நன்றி: தினமணி, 31/7/2017.