தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்

தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள், துரை மணிகண்டன், கமலினி பதிப்பகம், விலை 230ரூ.

இந்நூல் கணினி, இணையம் குறித்து அடிப்படையாக அறிந்து கொள்ள வேண்டிய பல செய்திகளைத் தொகுத்து உரைக்கிறது. இதனுள், ஐந்து அலகுகளில் செய்திகள் கூறப்பட்டுள்ளன.

முதல் மூன்று அலகுகளில், கணினியின் தோற்றம், வரலாறு, கணினியின் அமைப்பு-வகைகள், வன்பொருள்-மென்பொருள் விளக்கம், உள்ளீட்டுக் கருவிகளான விசைப்பலகை, ஒளிப்பேனா, சுட்டி, பந்துருளை, தொடுசுட்டி, வருடி முதலிய உள்ளீட்டுக் கருவிகளின் விளக்கம்.

மற்றும் திரை, அச்சுப்பொறி, அச்சுப்பொறி வகைகள், ஒலிபெருக்கி, ஒளிபெருக்கி ஆகிய வெளியீட்டுக் கருவிகளின் விளக்கம், ‘RAM, ROM, CD’ முதலிய சேமிப்புக் கருவிகளின் விளக்கம், கணினி சாளரம் (Windows) எனப்படும் இயங்குதளங்களின் விளக்கம் குறித்துப் பேசப்பட்டுள்ளன.
இரண்டாவது அலகு, தமிழில் அச்சுப் பதிப்பும், அஞ்சல் பரிமாற்றமும் குறித்துக் கூறுகிறது. இதில் மைக்ரோசாப்ட்வேர், எக்ஸல், பவர்பாயின்ட், அக்சஸ் இவை குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் அலகு, கணினியில் தமிழும் தமிழ் மென்பொருட்களும் இடம் பெற்றிருக்கின்றன. அடுத்த அலகில் இணையம் குறித்த அறிமுகமும், இணையத்தில் தமிழ் குறித்தும், இணைய மாநாடு- கணினி திருவிழாக்கள் பற்றியும், கணினித் தமிழுக்காக வழங்கப்படும் விருதுகள்- பெற்றவர் விபரமும் உண்டு.

மின்னஞ்சல், தமிழ் வலைப்பூக்கள், வலைப்பதிவுகளின் திரட்டிகள், எழுத்துருமாற்றி, பதிவிறக்கம் ஆகியவை குறித்து விளக்கப்பெற்றது சிறப்பாகும்.

இந்நிலையில், படித்தவர்கள் கூட, அறிந்து கொள்ளாத கணினி, இணையம் குறித்த சுவையான வரலாற்றுச் செய்திகளையும், ஆசிரியர் இணைத்திருக்கிறார்.

கணினியைப் பயன்படுத்தத் தெரியாதோரும், இது குறித்து தெளிவாக உணரும் வகையிலும் இந்நூல் சிறப்புற அமைக்கப் பெற்றுள்ளது.
இன்று பரவலாகப் பயன்படுத்தப்படும், ‘வாட்ஸ் ஆப்’ தோன்றிய சுவையான கதையும், முகநூல் பயன்பாடும், பள்ளி மாணவர் முதல், பெரியவர்கள் வரை அனைவருக்கும் விளங்கும் அழகிய தமிழில் கணினி- இணையம் குறித்த செய்திகள் நிறைந்துள்ள இந்நூல், காலத்தின் தேவைக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

– பன்னிருகைவேலவன்

நன்றி: தினமலர், 15/10/2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *