சொந்தச் சகோதரிகள்

சொந்தச் சகோதரிகள், கே. பாரதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 160ரூ.

வலியின் கதைகள்

பல்வேறு இதழ்களில் வெளிவந்த தனது கதைகளை ‘சொந்தச் சகோதரிகள்’ என்ற தலைப்பில் தொகுத்தளித்திருக்கிறார் கே. பாரதி. எட்டு வயதில் திருமணம், 12 வயதில் கணவன் மரணம் என தன்னுடைய வாழ்வில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தன்னுடைய நீண்ட கூந்தலை மழிப்பதற்காக உட்கார்ந்திருக்கும் பாகீரதியின் கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

பிராமணக் குடும்பங்களில் விதவைப் பெண்கள் நடத்தப்பட்ட விதத்தை இந்தக் கதை கூர்மையாக விளக்குகிறது. ‘சுயம்’ எனும் கதையில் பண்ணையார் மனைவி கனகத்தின் கதாபாத்திரம், பெண்கள் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதனைத் துணிந்து செயல்படுத்தத் தயங்க மாட்டார்கள் என்பதை விளக்குகிறது.

அதேபோல் ‘பெருமாளு’ கதையில் பெண்ணுக்கு மதிப்பளிக்கும் ஆண்களை அடையாளம் காட்டுவதுடன் குறுகிய மனப்பான்மை கொண்ட ஆண்களையும் வெளிப்படுத்துகிறது. குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் வெளியே தெரியாமல் போவதற்குக் காரணம் குழந்தைகள் அதனைக் கூற வரும்போது பெற்றோர்கள் அலட்சியம் செய்வதுதான் என்பதை விளக்குகிறது ‘வே-சிப்சு’ என்ற கதை.

இதேபோல் ‘மருந்து முள்ளு’, ‘மிச்சமிருக்கும் பயணம்’, ‘சொந்தச் சகோதரிகள்’, ‘பாவம் கிருஷ்ணா’ போன்ற கதைகளும் முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பேசுகின்றன. சமூகத்தில் பெரிதும் பேசப்படாத பிராமணப் பெண்களின் சமூக வாழ்வியல் மற்றும் குடும்ப அமைப்புகளில் நடைபெறும் ஒடுக்கு முறைகள் குறித்த விரிவான பார்வையை அவர்களின் பேச்சு வழக்கிலேயே இப்புத்தகத்தில் வாசிக்க முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-ரேணுகா.

நன்றி: தி இந்து, 21/10/17

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *