புனைவுவெளி
புனைவுவெளி, நா. விச்வநாதன், பேசும் புதிய சக்தி வெளியீடு, விலை 150ரூ.
படைப்புலகு
தமிழ் இலக்கிய ஆளுமைகளை அவர்களின் எழுத்து வழியே அணுக முயற்சிக்கும் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நகுலன், ப. சிங்காரம், லா.ச.ரா., எம்.வி.வெங்கட்ராம், தஞ்சை ப்ரகாஷ், ஜி. நாகராஜன் என எழுதிய காலத்தில் அதிகம் அறியப்படாத எழுத்தாளுமைகளின் மீது வாசக வெளிச்சம் பாய்ச்சும் முயற்சி இது.
நகுலன் என்ற பெயர்க்காரணம், நகுலன் படைப்புகளின் அகவுலகப் பயணம், தத்துவ தரிசனம், சுயத்தை அழித்தல் பற்றிப் பேசும் நகுலனின் கவிதைகள் பற்றிய கட்டுரை தொகுப்பின் முக்கியமான ஒன்று.
கடவுளுக்கு இந்த உலகில் இடமில்லை என்று அறிவித்த ப.சிங்காரம் நாவல்கள் பற்றிய கட்டுரை அவரை வாசிப்பதற்கான முதல் படி. நம் முன்னோடி எழுத்தாளர்களின் படைப்புகளின் நுட்பங்கள் உணர வாசிப்பு அனுபவம் வேண்டும். இந்தத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான கட்டுரைகள் வாசிப்பனுபவம் மிளிரும் கட்டுரைகள். முக்கியமான படைப்பாளிகளின் படைப்புகளை எளிமையான நடையில் விமர்சிக்கிறது இந்தப் புத்தகம்.‘
நன்றி: அந்திமழை, 1/11/2017,