அறியப்படாத கலாச்சாரப் புரட்சி
அறியப்படாத கலாச்சாரப் புரட்சி (கல்வியில் சீர்திருத்தங்களும் சீனக் கிராமப்புற வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்), டாங்பிங் ஹான், தமிழில்: நிழல்வண்ணன், அலைகள் வெளியீட்டகம், பக்.264, விலை ரூ.210.
1966 ஆம் ஆண்டு தொடங்கி பத்தாண்டுகள் நீடித்த சீன கலாசாரப் புரட்சியில் பலர் கொல்லப்பட்டனர். சீன பாரம்பரிய சின்னங்கள் அழிக்கப்பட்டன என்பன போன்ற விமர்சனங்கள் உலகெங்கும் கூறப்படுகின்றன.
கலாசாரப் புரட்சியால் சீனாவின் அரசியல், பொருளாதார, கலாசார வாழ்க்கை பின்னடைவைச் சந்தித்தது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியே 1981 இல் அறிவித்தது. கலாசாரப் புரட்சியைத் தொடங்கி நடத்தியவரான மா சே துங் மறைவுக்குப் பின்னர், சீனாவில் அது கைவிடப்பட்டது.
உண்மையில் கலாசாரப் புரட்சி சீனாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதா? என்று ஆராய்கிறது இந்நூல். நூலாசிரியர் டாங்பிங் ஹான் சீனாவின் ஷான் டாங் மாகாணத்தில் உள்ள ஜிமோ கோட்டத்திலும் பிற பகுதிகளிலும் கலாசாரப் புரட்சியின் போது நிகழ்ந்த மாறுதல்களையும், தற்போதைய நிலைமைகளையும் ஆராய்ந்து இந்நூலை எழுதியுள்ளார்.
சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைக் கைப்பற்றி நடத்தத் தொடங்கியபோது, கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் தலைவர்கள் அதிகார மனப்பான்மையுடனும், சுயநலத்துடனும் நடந்து கொண்டனர். நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்கள் மிகவும் பின்தங்கியிருந்தன. அதனால் கட்சியையும், ஆட்சியையும், சமுதாய நிலைமைகளையும் கம்யூனிச நெறியில் மாற்றியமைப்பதற்காக மா சே துங் கலாசாரப் புரட்சியைத் தொடங்கினார் என்கிறார் நூலாசிரியர்.
அதன் விளைவாக கிராம மக்கள் ஆட்சியதிகாரத்தில் பங்கு பெற்றனர். அவர்களே கல்விக்கூடங்களை கிராமங்களில் உருவாக்கினர். ஆண், பெண் இருபாலரும் கல்வி கற்றனர். கல்வி வெறும் மனப்பாடக் கல்வியாக இல்லாமல் நடைமுறை சார்ந்ததாக மாற்றியமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விவசாயத்திலும் பல நல்ல மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இன்று பொருளாதாரரீதியாக சீன வளர்ந்திருக்கிறது என்றால், அதற்கான அடிப்படையை கலாசாரப் புரட்சிதான் ஏற்படுத்திக் கொடுத்தது என்கிறார் நூலாசிரியர். இன்று சீனாவில் உள்ள ஏற்றதாழ்வுகள், வேலையின்மைப் பிரச்னைகள், தொழிலாளர்கள் படுமோசமாக நடத்தப்படுவது எல்லாம் சீனா கம்யூனிச நெறியை விட்டு விலகியதால் ஏற்பட்டவை என்கிறார். உலக அளவில் ஏற்படும் பல்வேறு சமூக மாறுதல்களைப் புரிந்து கொள்வதிலும், அவற்றில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்கும் வழிமுறைகளைக் கண்டறிவதிலும் ஆர்வமுள்ள அனைவருக்கும் பயன்படும் நூல்.
நன்றி: தினமணி, 9/4/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026626.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818