சட்டத்தால் யுத்தம் செய்
சட்டத்தால் யுத்தம் செய், நீதிபதி கே.சந்துரு, விகடன் பிரசுரம், பக்.167, விலை ரூ.115.

ஜனநாயக நாட்டின் முக்கிய அங்கமாக நீதிமன்றங்கள் விளங்குகின்றன. அந்த நீதிமன்றங்களின் கதவுகளை தங்கள் தரப்பு நியாயங்களுக்காகத் தட்டி போராடி வென்ற பெண்களின் வழக்குகள் குறித்து இந்த நூல் பேசுகிறது. இந்த வழக்குகளைத் தொடுத்த பெண்களின் முயற்சி மற்றும் அவர்கள் தொடர்ந்த வழக்கின் மூலம் கிடைத்த தீர்ப்புகள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
ஆணாதிக்கச் சிந்தனை பரவிக் கிடக்கும் இந்த சமூகச் சூழலில் உயர்பதவியில் இருக்கும் பெண்கள் தொடங்கி, விளிம்பு நிலையில் உள்ள பெண்கள் வரை நீதிமன்றத்தை தைரியமாக நாட, இந்த நூலில் இடம்பெற்றுள்ள வழக்குகளின் தீர்ப்புகள் நம்பிக்கை ஊட்டுகின்றன.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள அசின்பானு, உமாதேவி, பின்னையக்காள், கஸ்தூரி, காளிதாய், போத்துமல்லி உள்ளிட்டோரின் சட்டப் போராட்டங்களும் அதற்கான தீர்ப்புகளும் நூலை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன.
குறிப்பாக, பணியிடங்களில் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படும் பெண்களுக்கான விசாகா தீர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் பொதும்பு பள்ளி மாணவிகள் சந்தித்த பிரச்னைகளின் கொடூரம் பற்றிய செய்திகள் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டது இந்த நூல். நீதிமன்றங்களின் சில தீர்ப்புகளை நூலாசிரியர் விமர்சிக்கவும் செய்துள்ளார்.
நன்றி: தினமணி, 9/4/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026625.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818