அங்கீகாரம் (எனது வாழ்க்கை வரலாறு)
அங்கீகாரம் (எனது வாழ்க்கை வரலாறு), பி.ஆர்.துரை, சந்திரிகா பதிப்பகம், பக்-240, விலை ரூ.150.
ஏழை பிராமணக் குடும்பத்தில் 12-ஆவது குழந்தையாகப் பிறந்து, சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, ஒன்றாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி, 7-ஆம் வயதில் நாடகக் கம்பெனியில் சேர்ந்து, தன் குரல் வளம், நகைச்சுவைத் திறன், கடின உழைப்பு ஆகியவற்றால் வாழ்வில் உயர்ந்த நாடகக் கலைஞரான நூலாசிரியரின் வாழ்க்கை வரலாற்று நூல் இது.
இந்நூலின் மூலம், இவரது வாழ்க்கை வரலாறு மட்டுமின்றி, 60 ஆண்டுகளுக்கு முன் ஊர் ஊராகச் சென்று நாடகங்கள் நடத்திய நாடகக் கம்பெனிகளின் வாழ்க்கை முறைகளையும் அறிந்து கொள்ள முடிகிறது. மழைக் காலம் வந்தால் நாடகம் நடத்த முடியாத சூழல்.
அப்போது, ஒரு நாடகத்துக்கு அறிஞர் அண்ணா தலைமை வகித்ததால் கிடைத்த வருமானம், 60 நாடகக் கலைஞர்களின் ஒரு மாத உணவுச் செலவுக்குப் பயன்பட்டது என ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று, எம்.ஜி.ஆர்., சிவாஜி தலைமையிலும் நாடகங்கள் நடைபெற்றுள்ளன. சிறந்த கதையம்சம் கொண்ட நாடகங்கள், படிக்காதவர் உள்ளத்திலும் புலமையைப் புகட்டிவிடும் என்பதற்கு தானே ஓர் உதாரணம் என நூலாசிரியர் குறிப்பிடும்போது, அக்கால நாடகங்களின் மாண்பை உணர முடிகிறது.
வருஷம், பவுனு பவுனுதான் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும், எண்ணற்ற தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்திருக்கிறார். 2007-இல் எழுத்தாளர் ஏ.வீரப்பனின் நினைவேந்தல் நிகழ்வை ஜெயகாந்தன் தலைமையில் இவரே முன்னின்று நடத்தியிருக்கிறார். இதுபோன்ற பல சம்பவங்கள் நூல் முழுவதும் நிரம்பியுள்ளன.
அக்காலத்தில் இயங்கிய எண்பதுக்கும் மேற்பட்ட நாடகக் கம்பெனிகள், அதன் உரிமையாளர்கள் பட்டியலை இணைத்திருப்பது கூடுதல் சிறப்பு.
நன்றி: தினமணி, 9/4/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/auth9200.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818