சங்க இலக்கியங்களில் சமய நோக்கு
சங்க இலக்கியங்களில் சமய நோக்கு, கு.சுந்தரமூர்த்தி, தமிழ்த்துறை, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி,பக்.496, விலை ரூ.150.
சென்னையில் நடந்த அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி மாநாட்டில் (மார்ச், 8-11) வெளியிடப்பட்ட நூல் இது. சங்கத் தமிழ் இலக்கியங்கள் காதல், வீரம், மக்கள் வாழ்வியல், நெறிமுறைகள், தொழில், வாணிகம், கலை முதலியவற்றை எடுத்துரைக்கின்றன. என்றாலும், அவற்றினூடே இறைவன் பற்றியும், இறை இயல்புகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன.
பிறவா யாக்கைப் பெரியோன்; (சிலம்பு),கறைமிடற்று அண்ணல் (புறம்), ஆதிரை முதல்வன்(பரிபாடல்), மழுவோன் நெடியோன் தலைவனாக(மதுரைக் காஞ்சி), "மறைமுது முதல்வன் (சிலம்பு), பிறங்கு நீர் சடைக் கரந்தான்(கலித்தொகை) என சங்க இலக்கியங்கள் பலவும் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளான (திருவாசகம்) சிவபெருமானையே முதன்மைப்படுத்தி, அவருடைய மாண்புகளை எடுத்துரைக்கின்றன.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு ஆகிய நூல்களின் மொத்த எண்ணிக்கை 36. இந்த 36 நூல்களின் எண்ணிக்கையும் சைவ சித்தாந்தம் குறிக்கும் தத்துவங்கள் 36 எண்ணுடன் ஒத்து விளங்குகின்றன என்ற உண்மையை பல்வேறு வழிமுறைகளில் ஆராய்ந்துரைக்கிறது இந்நூல்.
சைவ சமயத்தின் தொன்மை, சிவபெருமான் பற்றிய குறிப்புகள், வழிபடு தெய்வங்கள், வழிபாடுகள், புராணச் செய்திகள், திருவிழாக்கள், விரதங்கள், சைவ சித்தாந்த மெய்ப்பொருள் இயல்புகள் முதலிய சைவம் தொடர்பான பலவும் எவ்வாறு சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன என்பதை இந்நூல் விரித்துரைக்கிறது.
அந்தந்த பக்கங்களிலேயே அவற்றிற்கான அடிக்குறிப்புகளைத் தந்திருப்பது சிறப்பு. சங்க இலக்கியங்களில் சைவ சமயம் குறித்த அனைத்துப் பதிவுகளையும் ஒருசேர எடுத்துரைக்கும் முழுமையான படைப்பு.
நன்றி: தினமணி, 9/4/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026802.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818