வாகீச முனிவரின் ஞானாமிர்தம்
வாகீச முனிவரின் ஞானாமிர்தம் (சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல்), ஆ. ஆனந்தராசன், நர்மதா பதிப்பகம், பக்.752, விலை ரூ.650.
வாகீச முனிவர் அருளிச் செய்த ‘ஞானாமிர்தம்‘ என்ற நூலே மெய்கண்ட சாத்திரங்களுக்கு எல்லாம் முன்னோடி நூலாக இருக்கிறது.
சைவ சித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள் உண்மைகளை 75 அகவற்பாக்களால் விளக்குகிறது ஞானாமிர்தம். உலகப் படைப்பு, பசுவின் மூவகை அவத்தை, ஆன்மா அடையும் ஐந்துநிலை வேறுபாடுகள், மாயாவாத மறுப்பு, சற்காரிய வாதம், மூவகை துக்கங்கள், பசு தரிசனம், ஞானியரின் இயல்பு, குரு உபதேசப் பயன், தீக்கை விசேடம், சிவசக்தியின் செயல்கள், சிவாம்சத் தன்மை பெறுதல், அணைந்தோர் தன்மை (ஜீவன் முக்தர்) முதலிய பலவற்றையும் எடுத்துரைக்கும் 75 நூற்பாக்களுக்கு விரிவுரை, தொகுப்புரை, விளக்கவுரை, பதவுரை ஆகியவை எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன.
நூலில் பல உத்திகளை வாகீசர் கையாண்டிருக்கிறார். அதாவது, பொருள் இலக்கணத்தை முன்னர் கூறி, பின் பொருள் உண்மையை (இருப்பு) நிறுவுகிறார். முன்னர் தொகுத்துக் கூறியதை, பின்னர் வேறோர் இடத்தில் அவற்றை வகுத்துக் காட்டுகிறார். ஒரு பகுதியை மட்டும் கூறி, எஞ்சியதை நாமே வருவித்துக் கொள்ளச் சொல்கிறார். முன்னர் பொதுவாகக் குறிப்பிட்டதை வேறோர் இடத்தில் சிறப்பாக விளக்குகிறார்.
உலக மாந்தர் தமக்கு வரும் துன்பத்திற்கு உண்மையான காரணம் தம் முன்வினையே என்பதை உணராமல், பிறர் மீது வெறுப்பும் கோபமும் கொண்டு வினையை மேலும் பெருக்கிக் கொள்கின்றனரே' என்று மாந்தர்தம் அறியாமையை "ஞான உபாயம் அறியாதோர் நிலையில் வைத்துப் பதிவு செய்கிறார்.
சிவஞானத்தை வாரி வழங்கும் இந்நூல், உண்மையாகவே ஞானத்திற்கான திறவு கோலாக இருக்கிறது.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: தினமணி, 30/4/2018.