மறைமலையடிகளாரின் அடிச்சுவட்டில்,

மறைமலையடிகளாரின் அடிச்சுவட்டில்,  மறை.தி.தாயுமானவன், மறைமலையடிகள் பதிப்பகம், பக்.272, விலை ரூ.350.

நூலாசிரியர் மறைமலையடிகளின் பெயரன். மறைமலையடிகளின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் சுருக்கமாகவும் தெளிவாகும் நூலின் தொடக்கத்தில் இடம் பெற்றுள்ளன. அதற்கு அடுத்து, மறைமலையடிகள் 1898 முதல் 1950 வரை எழுதிய நாட்குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. நலமாக வாழ்வதற்கு எவற்றையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மறைமலையடிகள் வலியுறுத்தினார் என்பது அடுத்ததாக விளக்கப்பட்டுள்ளது.

தனித்தமிழ் இயக்கத்தின் வளர்ச்சி, தமிழைக் காக்க மறைமலையடிகள் நிகழ்த்திய போராட்டங்கள் என நூல் விரிகிறது.

29.2.1912 இல் மறைமலையடிகள் எழுதிய நாட்குறிப்பில், ‘மூட்டைப்பூச்சி, கொசுத் தொல்லையினாலும் சாக்கடை நாற்றத்தினாலும் சென்னையில் நேற்றிரவு உறங்கவே இயலவில்லை‘ என்று குறிப்பிட்டிருக்கிறார். சென்னையில் இன்றும் அது தொடரும் கதை. 14.3.1929 இல் எழுதிய நாட்குறிப்பில், ‘அடுப்பெரிக்கும் விறகுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. பக்கிங்காம் கால்வாய் செப்பனிடப்பட்டு வருவதால் விறகு சுமந்து வரும் படகுகள் செல்ல முடியவில்லை‘ என்று எழுதியிருக்கிறார்.

பக்கிங்காம் கால்வாய் சாக்கடையாக தேங்கிவிட்டதால் படகுகள் இப்போதும் செல்ல முடிவதில்லை என்ற உண்மை உறுத்துகிறது. 1942 இல் ஒரு ரூபாய்க்கு 2 படி 7 ஆழாக்கு அரிசி விற்கப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி ‘அரிசியும் பிற உணவு தானியங்களும் மிக அதிகமான விலைக்கு விற்கின்றன. ஏழை மக்கள் எப்படி உயிர் வாழ்கின்றனர் என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்பாக உள்ளது‘ என்று மறைமலையடிகள் கவலைப்பட்டிருக்கிறார். அந்தக் கவலை இப்போதும் தொடர்கிறது.

மறைமலையடிகளைப் பற்றிய நூல் இது எனினும், அவர் காலத்தின் சமுதாயநிலையைத் தெரிந்து கொள்ள உதவும் ஆவணமாக இந்நூல் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

நன்றி: தினமணி, 6/8/2018.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *