மணிவாசகத்தைக் காதல் செய்து உய்மின்
மணிவாசகத்தைக் காதல் செய்து உய்மின், இடைமருதூர் கி.மஞ்சுளா, மணிவாசகர் பதிப்பகம், பக்.176, விலைரூ.125.
சைவ சமயக் குரவர்கள் நால்வருள் ஒருவரான மணிவாசகரின் திருக்கோவையாரில் இடம் பெற்ற மீண்டாரென உவந்தேன் என்ற பாடலையும், அதன் பொருளையும் விளக்கும் தூண்டா விளக்கனையாய் என்ற கட்டுரையில் தொடங்கி, இறைவனின் இன்பமான இடபத்தை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானின் பெருமையைக் கூறும் இன்ப ஊர்தி என்ற கட்டுரை ஈறாக இருபத்தைந்து கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
நூலாசிரியர் மேடையில் பேசியவை, தினமணியிலும் வேறு சிறப்பு மலர்களிலும் எழுதியவைகட்டுரைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கட்டுரையும் சைவத்தின் ஆழத்தையும் தமிழின் விரிவையும் புலப்படுத்துவதாக உள்ளது. எந்தவொரு கட்டுரையும் மேம்போக்கானதல்ல. குறிப்பாக மடலின் மட்டே என்ற சொற்றொடருக்குத் தரப்பட்டிருக்கும் விளக்கம் (என் மதுவெள்ளமே), திருவாசகத்தின் அச்சப்பத்து பகுதிக்குக் கூறப்பட்டிருக்கும் புதுமையான விளக்கம் (மாணிக்கவாசகரின் அஞ்சாமையும் அச்சமும்), மாணிக்கவாசகர் கூறும் இருகை யானையையும், கம்பர் குறிப்பிடும் இரு கை வேழத்தையும் ஒப்பிட்டு விளக்கும் நேர்த்தி(மாணிக்க வாசகரும் கம்பரும் கண்ட இருகை யானை) இவை அனைத்துமே மிகச் சிறப்பு.
வாலறிவனைக் காண வேண்டுமா? கட்டுரையில் மணிவாசகர் குறிப்பிடும் இணையார் திருவடி என்ற சொற்றொடருக்கான விளக்கம் வேறு சமய நூல்களில் காணக் கிட்டாதது.
செய்திகளுக்கிடையே மேற்கோள்களாக சைவ சித்தாந்த நூல்களிலிருந்து மட்டுமல்லாது, தொல்காப்பியர், திருவள்ளுவர், கம்பர், திருமூலர், துறைமங்கலம் சிவப்பிரகாசர், வள்ளலார் போன்ற பலருடைய கருத்துகள் எடுத்தாளப்பட்டிருப்பது வாசிப்பனுபவத்தைக் கூட்டுகிறது.
படித்தவர்களால் வந்த பிழை; கட்டுரையும், மாணிக்கவாசக சுவாமிகள் சரித்திர கீர்த்தனை கட்டுரையும் சைவ அன்பர்களுக்கான கருவூலம்.
சைவத்தின் பெருமையும் தமிழின் இனிமையும் ஒருங்கிணைந்த தொகுப்பு.
நன்றி: தினமணி, 17/12/18.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818