ஈரோடு தமிழன்பன் கவிதைகள் – தொகுதி 6
ஈரோடு தமிழன்பன் கவிதைகள் – தொகுதி 6, ஈரோடு தமிழன்பன், தொகுப்பாசிரியர்: வ.ஜெயதேவன், பூம்புகார் பதிப்பகம், பக்.872, விலை ரூ.750.
புகழ்பெற்ற தமிழ்க்கவிஞரான ஈரோடு தமிழன்பனின் கவிதைகள் பல தொகுதிகளாக வெளிவந்து இருக்கின்றன. இது ஆறாவது தொகுதி. இத்தொகுதியில் கவிஞரின் 14 கவிதைத் தொகுப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
கவிதையின் பேசு பொருள்களும், அவற்றின் வெளிப்பாடுகளும் ஒவ்வொரு கவிதையிலும் மாறுபட்டும், புதியனவாகவும் இருக்கின்றன. இப்போதுதான் புதிதாக எழுதத் தொடங்கும் இளைஞனைப் போல கவிஞர், ஒவ்வொரு கவிதையையும் புதுவிதமாக எழுதிப் பார்க்கிறாரோ என்று இதிலுள்ள கவிதைகள் நம்மை எண்ண வைக்கின்றன.
தான் பிறந்த சென்னிமலை பற்றி பாடிய ‘அன்னை மடியே உன்னை மறவேன்‘ தொகுப்பு, இஸ்லாம் இயற்கை நெறி பற்றி எழுதிய இடுகுறிப் பெயரில்லை இஸ்லாம்; தொகுப்பு, கவிஞரின் அமெரிக்கப் பயண அனுபவங்களின் பகிர்வாக ஓலைச்சுவடியும் குறுந்தகடும் தொகுப்பு, வாழ்க்கையின் பொருளை உணர்த்தும் சொல்ல வந்தது தொகுப்பு, ஈழப் போராட்டத்தைப் பற்றிய கவிதைகள் அடங்கிய என் அருமை ஈழமே தொகுப்பு, மானுட வெற்றிகளை, வீழ்ச்சிகளைப் பதிவு செய்யும் கதை முடியவில்லை தொகுப்பு உள்ளிட்ட 14 தொகுப்புகளும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
கவிதைகள் எழுதுவதில் மட்டுமல்ல, தமிழில் புதுவிதமான கவிதைகளை உருவாக்கி வளர்த்தெடுப்பதிலும் கவிஞருக்குள்ள ஆர்வம் வியக்க வைக்கிறது. கஜல் என்னும் உருதுக் கவிதை வடிவத்தைத் தமிழுக்குக் கொண்டு வரும்விதமாக அவர் எழுதிய கவிதைகளையும், தமிழ்ப் பழமொழியையும் ஜப்பானிய சென்ரியுவையும் கலந்து பழமொன்ரியு என்ற புதிய வடிவத்தில் அவர் எழுதிய கவிதைகளையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஓயாமல் கவிதை வெளியில் பயணிக்கிற கவிஞரின் கவிதை முயற்சிகள் அவர் ஒரு பிறவிக்கவிஞர் என்ற உண்மையை நமக்குள் அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்கின்றன.”
நன்றி: தினமணி, 10/12/18.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818