கருத்தியல் பற்றிய சிந்தனைகள்
கருத்தியல் பற்றிய சிந்தனைகள், தேவி பிரசாத் சட்டோபாத்தியாய, தமிழில்: சே.கோச்சடை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்., பக்.204, விலை ரூ.170.
இந்தியப் பண்பாட்டு மரபியலில் ஆக்க அறிவியல், கணிதம், வானவியல், மருத்துவம் ஆகியவை உருவாகி வளர்ந்தமை பற்றி இந்நூல் கூறுகிறது. அதேபோன்று ஏற்கெனவே உருவாகி வளர்ந்திருக்கும் இந்தியாவின் பகுத்தறிவு மரபு, செயலறிவுக் கூறுகள், மெய்யியல், அறிவியல் ஆகியவற்றில் நாம் மேலும் வளர்த்தெடுக்க வேண்டியவை பற்றியும் இந்நூல் கூறுகிறது. பண்டைய இந்தியாவின் செழுமையான அறிவியல், பகுத்தறிவு வளர்ச்சி, ஆதிக்க சக்திகளின் திட்டமிட்ட மெய்யியல் பரப்பலால் எவ்வாறு தடுக்கப்பட்டது என்பதை இந்நூல் ஆதாரத்துடன் எடுத்துக்காட்டுகிறது.
உத்தாலக அருணி தன் மகன் ஸ்வேதகேதுவையே ஆய்வுப் பொருளாக்கி, சிந்தனை மூளையில் தோன்றுவதையும், அதற்கு அடிப்படை தண்ணீரும் உணவும் என்று மெய்ப்பித்திருக்கிறார். ஒரு பொருளின் மிக மிக நுண்ணிய சாரம்தான் ஒவ்வொரு பொருளையும் இறுதியாகப் படைக்கிறது என்றார் உத்தாலகர். இந்த மிக மிக நுண்ணிய சாரம் கண்ணுக்குப் புலப்படாத, பகுதிகளற்ற முழுநிறைவுக் கூறுகளால் ஆனது என்று அவர் கருதுகிறார். அணு தொடர்பான இன்றைய அறிவியல் கருத்துகளின் சாரத்தை அன்றே உத்தாலகர் கண்டறிந்திருக்கிறார்.
இத்தகைய வளமான பகுத்தறிவு, அறிவியல் மரபையுடைய இந்தியாவின் மெய்யியல், கருத்தியல் துறையில் உள்ள இயற்கை கடந்த தன்மைகள் குறித்த ;நம்பிக்கைகளையும், அவை தொடர்பான கட்டுக்கதைகளையும் நீக்கிவிட்டு, அதன் உயிர்ப்புள்ள ஆக்கக் கூறுகளை வளர்த்தெடுத்துப் பரப்புவதன் இன்றியமையாமையை இந்நூல் வலியுறுத்துகிறது.
நன்றி: தினமணி, 4/2/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027836.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818