தொல்காப்பிய ஆய்வடங்கல்
தொல்காப்பிய ஆய்வடங்கல், மு.சங்கர், காவ்யா, பக்.336, விலை ரூ.340.
தொல்காப்பியம் குறித்து பல்வேறு பொருண்மைகளில் 2000 முதல் 2019 வரை வெளியான 333 ஆய்வுக் கட்டுரைகள், 40 ஆய்வு நூல்கள், ஆய்வியல் நிறைஞர்(எம்.ஃபில்), முனைவர்பட்ட (பிஎச்.டி.) ஆய்வேடுகள் 58 ஆகியவை மூன்று பகுதிகளாக இந்நூலில் ஆய்வடங்கலாகியிருக்கின்றன.
கட்டுரையின் தலைப்பு, எழுதியவர் பெயர், பதிப்பித்த ஆண்டு, வெளியீட்டாளர் பெயர், கட்டுரையின்-நூலின் பக்கங்கள் முதலியவற்றுடன், ஒவ்வொரு கட்டுரையும் சொல்லும் ஆய்வு முடிவை கருத்து என்கிற பெயரில் சுருக்கமாகவும்; அதனுடன் ஆய்வேட்டின் உள்ளடக்கத்தையும் தந்திருப்பது சிறப்பு. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி பல்வேறு தமிழ் அமைப்புகள், பதிப்பகங்கள், காலாண்டு இதழ்கள், இணைய வாரப் பத்திரிகைகள் ஆகியவற்றில் வெளியான தொல்காப்பியம் தொடர்பான ஆய்வுகள் அனைத்தும் இதில் உள்ளன.
2000 முதல் 2019 வரையிலான தொல்காப்பியம் குறித்த கட்டுரையோ, ஆய்வேடோ விடுபட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்த நூலாசிரியர், தினமணி-தமிழ்மணியில் ப.பத்மநாபன் எழுதி வெளியான தொல்காப்பிய(ர்)ம் காட்டும் விழுமம் என்கிற கட்டுரையையும் இணைத்திருப்பது சிறப்பு. அதே நேரத்தில், கடிசொல் இல்லை காலத்துப் படினே என்ற தலைப்பில் ஆறு.அழகப்பனும் (2001), ஆ.சிவலிங்கனாரும் (2004) எழுதிய கட்டுரை அடங்கலைப் பதிவு செய்திருக்கும் நூலாசிரியர் கண்ணில் தினமணி-தமிழ்மணியில் பிஞ்ஞகன் எழுதிய (31.5.2015) கடிசொல் இல்லை காலத்துப் படினே என்கிற கட்டுரை ஏனோ படவில்லை போலும்! அதையும் இணைத்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். தொல்காப்பியம் தொடர்பாக சிந்திக்க, எழுத, கற்பிக்க நினைப்போருக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம்!
நன்றி: தினமணி,13/1/2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818