மணல்
மணல், பா.செயப்பிரகாசம், நூல்வனம் வெளியீடு, விலை: ரூ.210.
பா.செயப்பிரகாசம் எழுதிய ‘மணல்’ நாவல், சமகால அரசியலைப் பேசுகிறது. ‘மணல்’ என்ற எளிமையான தலைப்பே அதன் கதையையும் அரசியலையும் சொல்லிவிடும். இயற்கையின் சமீபத்திய படைப்பான மனிதன் எப்படித் தன்னுடைய சுயநல உறுபசிக்குப் பெற்ற அன்னையைப் பிய்த்துத் தின்கிறான் என்பதையும், உலகெங்கும் உள்ள இயற்கையின் அடிப்படை ஆதாரங்களை அழிப்பதில் மனிதன் எவ்வளவு வேகமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறான் என்பதையும், முதலாளிகளின் கொள்ளை லாபவேட்டைக் களமாக மக்களின் உழைப்பு மட்டுமல்ல; இயற்கையின் மார்பில் ரத்தம் வரும் வரை உறிஞ்சிக் குடிக்கிற வெறித்தனத்தையும் இந்நாவல் பேசுகிறது.
கவிதை, சிறுகதை, நாவல், உரைநடை, அரசியல்களம், பேச்சு என்று பல வகைகளில் காத்திரமான பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கும் பா.செயப்பிரகாசத்தின் இந்நாவல் பல காரணங்களால் முக்கியத்துவம் பெறுகிறது. அம்மன் கோவில்பட்டி, வேடபட்டி, ஆத்தாங்கரை, விளாத்திகுளம் போன்ற கிராமங்களின் உயிர்நாடியாக ஓடிக்கொண்டிருக்கும் வைப்பாற்றின் கதையாக ‘மணல்’ விரிகிறது. ஒரு ஆறு தோன்றி, தன் பாதையை உருவாக்கிக்கொள்ள ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகின்றன.
தூத்துக்குடி விளாத்திகுளத்தில் ஓடிக்கொண்டிருக்கும் வைப்பாறு, மணல் திருட்டால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துபோவதைச் சொல்லும் கதை இது. முதலாளிகளாலும் அரசியலர்களாலும் அதிகாரிகளாலும் சூழ்ச்சிக்குப் பலியாகி அதன் ஆயிரமாண்டு வாழ்க்கையானது பத்து ஆண்டுகளுக்குள் முடிந்துபோவதைச் சொல்கிற கதை இது. மணல் சுரண்டல் வரலாற்றை மட்டும் சொல்லவில்லை; மனித உறவுகளையும் போராட்டங்களையும் சேர்த்தே சொல்கிறார்.
முதலில் அறிந்தும் அறியாமலும் நடந்த மணற்கொள்ளை, பின்னர் அரசு உத்தரவோடு அதிகாரபூர்வமாக நடந்ததுதான் வைப்பாற்றுக்கு நிகழ்ந்த சோகம்.நாவல் நெடுக அசலான கரிசல் கிராமத்து மனிதர்களின் கரிசல் வழக்காறு, சொலவடைகள், கதை, கேலி, கிண்டல், ஏகடியம், கோபம் என்று வாழ்க்கையின் துடிதுடிப்பானது மழைக்கால வைப்பாறாக ஓடுகிறது. மக்கள் போராட்டங்களின் வீச்சும் அதை அடக்க, திசைதிருப்ப, மடைமாற்ற அரசும் அதிகாரவர்க்கமும் செய்கிற மாய்மாலங்களும்கூட விரிவாகப் பதிவாகியிருக்கின்றன. ‘மணல்’ நாவல் பேசும் சுற்றுச்சூழல் அரசியல் மிக முக்கியமானது. அதைக் கலையாக மாற்றியதில் பா.செயப்பிரகாசம் வெற்றிபெற்றிருக்கிறார். நாவலில் வரும் இன்னாசிக்கிழவரின் குரலில், பா.செயப்பிரகாசம் சொல்கிறார்: “பூமி மனிதர்களுக்குச் சொந்தமானதில்லை; மனிதன்தான் பூமிக்குச் சொந்தமானவன்” இதுதான் ‘மணல்’ நாவலின் அடிநாதம்.
நன்றி: தமிழ் இந்து, 23.05.2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818