கல்குதிரை
கல்குதிரை, ஆசிரியர்: கோணங்கி, விலை: ரூ.375
தமிழ் நவீன இலக்கியப் பரப்பில் காத்திரமாக இயங்கும் பெரும்பாலானவர்களின் எழுத்துகளோடு தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் அரிதான சிறுபத்திரிகைகளில் ஒன்று ‘கல்குதிரை’. அச்சு ஊடகம் நலிவில் இருக்கிறது என்று சொல்லப்படும் காலத்தில் அதே கனத்துடன் இரண்டு தொகுதிகளாக வெளியாகியுள்ளது. ஊரடங்கு காலம் போன்ற காலத்தில்தான் ‘கல்குதிரை’யை முழுமையாக வாசிக்கவும் முடியும். கவிதை, விமர்சனம், நாவல், சிறுகதை எனத் தமிழிலும் சர்வதேச அளவிலும் நடந்துகொண்டிருக்கும் சலனங்களை ‘கல்குதிரை’ மூலம் நாம் உணர முடியும்.
இந்த இதழின் பிரதானப் படைப்புகளில் ஒன்று என பாலசுப்ரமணியன் பொன்ராஜ் எழுதிய ‘டான் கிஹாத்தே’ நாவல் குறித்த நீளமான கட்டுரையைச் சொல்லலாம். கல்விப்புல ஆய்வு கொடுக்கும் அலுப்பின்றி, ரசனை விமர்சனம் என்றும் சொல்லிவிட முடியாத தரவுகளின் திடத்தோடு இந்தக் கட்டுரையை ஆழமாகவும் சுவாரஸ்யமாகவும் அவர் எழுதியுள்ளார். நாவல் என்ற வடிவத்தின் இதுவரையிலான பயணத்தை பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கட்டுரை வழியாகத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
‘சுளுந்தீ’ நாவல் குறித்த பா.வெங்கடேசனின் கட்டுரையும், பீட்டர் மத்தீசனின் ‘பனிச்சிறுத்தை’ குறித்த சா.தேவதாஸின் கட்டுரையும் முக்கியமானவை. கண்டராதித்தனும் சபரிநாதனும் எழுதியுள்ள நீள்கவிதைகள் கவிதை வடிவத்தில் ஒரு சவாலைச் சந்திக்கின்றன. அசதா, அனோஜன் பாலகிருஷ்ணன், மு.குலசேகரன் சிறுகதைகள் குறிப்பிடத் தகுந்தவை.
தமிழ் மண் சார்ந்த நாடகவியலைத் தொடர்ந்து உரையாடியும் நிகழ்த்தியும் வரும் நாடகக் கலைஞர் முருக பூபதியின் நேர்காணல், மனிதமையம் சார்ந்து நாம் உருவாக்கிய உலகத்தைக் கேள்வி கேட்டு, உலகெங்கும் பெருகியிருக்கும் அரசு வன்முறைகளையும் அதற்கு எதிரான போராட்டங்களையும் நாடகம் என்ற கலைவடிவத்தை முன்னிறுத்திப் பேசுகிறது. மேற்குலகில் பிரசித்தி பெற்ற இசை நாடக வடிவமும் சினிமாவின் மூதாயுமான ஓப்ரா வடிவத்தைக் குறித்து எழில் சின்ன தம்பியின் கட்டுரை ஓப்ராவின் வேர்களைத் தேடுகிறது.
நன்றி: தமிழ் இந்து, 1/8/20
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818