அவசரம்- உடனடியாகச் செய்ய வேண்டிய சமூக பொருளாதார மாற்றங்கள்

அவசரம்- உடனடியாகச் செய்ய வேண்டிய சமூக பொருளாதார மாற்றங்கள்,  சோம.வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், பக்.152; விலை ரூ.175.

நம்நாட்டில் வறுமை இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கிறது. சுற்றுச்சூழல் கேடு நிகழ்ந்த வண்ணம் உள்ளது. மக்களின் வாழ்க்கைநிலையில் மிகப் பெரிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. பெரிய அளவிலான பொருளாதார வளர்ச்சி இல்லை'- இவ்வாறு நம்நாட்டின் பொருளாதார நிலையை மிகத் தெளிவாக இந்நூல் தக்க சான்றுகளுடன் படம் பிடித்துக் காட்டுகிறது.

இப்படியே நிலைமை தொடருமானால், மிகப்பெரிய பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இப்போதுள்ள இந்தப் பொருளுற்பத்தி முறை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றால், இதைக் காக்க வேண்டும் என்றால் உடனே சில நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக்கினால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. மக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அப்படி குறைக்க மக்கள் முன் வராவிட்டால் "ஒரு காலி பிளாஸ்டிக் பாட்டில் விலை 50 ரூபாய், 75 ரூபாய் என்பது போலாக்கி, அதன் பயன்பாட்டை வெகுவாக குறைக்க வேண்டும்' என்ற யோசனையை நூலாசிரியர் முன் வைக்கிறார். பிளாஸ்டிக் பாட்டில்களின் உற்பத்தியைத் தடை செய்ய வேண்டும் என்ற யோசனை கூறப்படவில்லை.

இயந்திரமயமாக்குவதால், பெரிய அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டமும், வறுமையும் ஏற்பட்டுவிடுகின்றன. இதற்கு, "உற்பத்திகளில், சேவைகளில் குறைந்தபட்சம் எவ்வளவு மனித உழைப்பு பயன்படுத்தப்பட வேண்டும்; மொத்த விலையில் குறைந்தபட்சம் எந்த அளவு உழைக்கும் மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்கிற சட்டங்களை உருவாக்குதல்' வேண்டும். "கார்ப்பரேட் நிறுவனங்களின் உற்பத்தியளவு, வரவு செலவு மற்றும் இலாபங்களுக்கு இவ்வளவுதான், இதற்கு மேல் கூடாது என்ற வரையறைகள் உருவாக்க' வேண்டும். தனிநபர்கள் சொத்துகளுக்கு உச்சவரம்பு கொண்டு வர வேண்டும்; மருத்துவம், போக்குவரத்து, உணவு உற்பத்தி, விநியோகம் போன்ற துறைகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வியாபாரம் செய்யும் நிறுவனங்களின் பங்குகளில் 5 முதல் 10 சதவீதத்தை மத்திய, மாநில அரசுகள் வாங்கி நிறுவனத்தின் பங்குதாரர்களாக ஆக வேண்டும்' என்பன போன்ற தீர்வுகள் இந்நூலில் முன் வைக்கப்படுகின்றன.

லாபத்தின் அடிப்படையிலான உற்பத்திமுறையைக் காப்பதற்காக, அரசு உள்ளிட்ட பல நிறுவனங்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் பல நாடுகளில் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்ற நிலையில், பொருளாதாரம் உலகமயமான சூழலில், நூலாசிரியர் முன் வைக்கும் தீர்வுகள், எந்த அளவுக்கு நடைமுறையில் சாத்தியமாகும் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

தினமணி,25/1/21 .

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/9788194865353/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *