கவிதை மரபும் தொல்காப்பியமும்
கவிதை மரபும் தொல்காப்பியமும், இராம.குருநாதன், மணிவாசகர் பதிப்பகம், பக்.208, விலை ரூ.150.
“மரபென்பது காலந்தோறும், இடந்தோறும் வழக்குத் திரிந்தவற்றுக்கேற்ப வழுப்படாமற் செய்வதோர் முறைமை’ என்கிறார் நச்சினார்க்கினியர். “தொல்காப்பியப் பொருளதிகாரம் தமிழ்க் கவிதையியலுக்கான கட்டமைப்பைக் கொண்டது. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகிய இரண்டு இலக்கண நீர்மையைப் புலப்படுத்தினாலும், அவை கவிதை கோட்பாட்டிற்குரிய இயல்போடு அமைந்து, பொருளதிகாரம் உணர்த்தும் கவிதையியலுக்குத் துணை செய்வனவாய் உள்ளன’ என்கிறார் நூலாசிரியர்.
தொல்காப்பியக் கவிதையியல், சம்ஸ்கிருதத்தோடும், கிரேக்க கவிதையியலோடும் ஒப்பும் உறவும் கொண்டிருப்பதை இந்நூல் மிகச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. அதுமட்டுமல்ல, மேலைநாட்டுக் கலை, இலக்கியக் கோட்பாடுகள் குறித்துத் தமிழில் பல கட்டுரைகளும், நூல்களும் வெளிவந்துள்ள நிலையில், தொல்காப்பியத்தோடு எவ்வாறு அவற்றை இணைவுபடுத்திப் பார்க்க வேண்டும் என்ற அறிஞர்களின் கருத்தோட்டங்களையும் சுருக்கமாக எடுத்துரைக்கிறது.
“இலக்கிய உருவாக்கம்- மரபும் வழக்கும்’ எனும் தலைப்பில், தமிழரின் பெருநூலான தொல்காப்பியம் குறித்த சிறப்பையும்; மரபு, மரபு திரிதல், திரியாமை, மரபு மாற்றம், மரபு மயங்காமை, தொல்காப்பியத்தை இலக்கண நூலாகவும், வாழ்வியல் நூலாகவும் அறிஞர் உலகம் சுட்டிக்காட்டும் விதம் ஆகியவற்றை விளக்கியுள்ளார்.
“ஓசை ஒழுங்கும் வடிவக்கூறுகளும்’ எனும் தலைப்பில் ஒலியும் எழுத்தும், ஒலியும் இசை வடிவமும் தொடர்பான செய்திகளை எடுத்துரைத்துள்ளார்.
இலக்கிய வகை வளர்ச்சியின் போக்கு குறித்துக் குறிப்பிடும்போது, “காலம் மாற மாறக் கவிதையின் போக்கு வடிவிலும் பொருண்மையிலும் மாற்றம் காண்பது இயல்பு என்பதையும், சிற்றிலக்கியங்களின் காலம் எனப்படும் 17-ஆம் நூற்றாண்டில் இலக்கிய வகை வளர்ச்சியில் சில சிற்றிலக்கியங்களின் மரபும் அருகிப் போயிற்று’ என்கிறார். மேலும், பழைய இலக்கியப் போக்கை மாற்ற விரும்பிய மகாகவி பாரதியின் நிலைப்பாட்டை அவரது கட்டுரை மூலம் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ள மேலைத் திறனாய்வு நூல்களின் துணைகொண்டு, தொல்காப்பியத்தை மேலாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி, 16/8/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031547_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818