நாரண.துரைக்கண்ணனாரின் புதினப் படைப்புத்திறன்கள்
நாரண.துரைக்கண்ணனாரின் புதினப் படைப்புத்திறன்கள், அ.இராமரத்தினம்; பதின்மர் பதிப்பம், பக்.226, விலை ரூ100.
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த பலருள் குறிப்பிடத்தக்கவர் நாரண. துரைக்கண்ணன். இவர் புதினம், கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதை, வாழ்க்கை வரலாறு, பயண இலக்கியம் என எல்லா வகைகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஆயினும் இவர் ஒரு புதின எழுத்தாளராகவே அறியப்படுகிறார்.
இந்நூல் நாரண.துரைக்கண்ணனின் படைப்புத்திறனை ஆய்வுநோக்கில் பார்த்து எழுதப்பட்டுள்ளது. அவர் தனது புதினங்களுக்காகத் தேர்ந்தெடுத்துள்ள கருப்பொருள்களில் உள்ள சமூக, அரசியல், பொருளாதாரத் தாக்கம், அவர் கைக்கொண்ட புதின நடை, அவருக்கான இலக்கியக் கோட்பாடுகள் இவையெல்லாம் ஒன்பது பகுதிகளாகப் பகுத்து விளக்கப்பட்டுள்ளன,
நாரண.துரைக்கண்ணன் பத்தொன்பது புதினங்களே எழுதியுள்ளார். அவற்றில் பெரும்பாலானவை அவருடைய பொறுப்பில் வெளிவந்து கொண்டிருந்த “ஆனந்த போதினி’, “பிரசண்ட விகடன்’ ஆகிய இதழ்களில் வெளிவந்தவை. ஓரிரு புதினங்கள் வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன.
ஒவ்வொரு புதினமும் ஒவ்வொரு களப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் எல்லாப் புதினங்களிலும் சமுதாய மேம்பாடு என்பதே அடிநாதமாக இருக்கிறது.
புதினத்திற்கான கருப்பொருளைத் தேர்வு செய்வதில் மட்டுமல்ல, பாத்திரங்களுக்குப் பெயரிடுவதில் கூட இவர் கவனம் செலுத்தியிருக்கிறார். நன்றாகப் பாடக் கூடிய ஒரு பெண்ணின் பெயர் கோகிலா(கோகிலா), அதர்மமாக நடந்து கொள்ளும் மனிதரின் பெயர் தருமபூஷணம்(வேடதாரி). இப்படி ஏராளம்.
ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய், சரத்சந்திரர் ஆகிய பிறமொழி எழுத்தாளர்களின் படைப்புகளையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் இவர்.
நாரண.துரைக்கண்ணனின் புதினங்களை விரிவாகவும் தெளிவாகவும் ஆய்வு செய்துள்ளது இந்நூல்.
நன்றி: தினமணி, 27/9/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818