ரொமிலா தாப்பர்
ரொமிலா தாப்பர் – ஓர் எளிய அறிமுகம், மருதன், கிழக்கு பதிப்பகம், பக். 176, விலை ரூ. 200.
நம் காலத்தின் மாபெரும் வரலாற்றாய்வாளரான ரொமிலா தாப்பரின் எழுத்துகளை அறிந்தவர்களுக்குக்கூட அவரைப் பற்றிய விவரங்களும் பின்புலமும் அவ்வளவாகத் தெரிந்திருப்பதில்லை என்ற குறையைத் தீர்க்கத் தமிழில் வந்திருக்கிறது இந்த நூல்.
வாழ்க்கை, வரலாறு, உரையாடல் என்ற மூன்று பெரும் தலைப்புகளில் எளிய, ஆனால் ஓரளவில் விரிவாகவே ரொமிலா தாப்பர் பற்றி விவரிக்கிறார் ஆசிரியர் மருதன்.
தில்லியிலுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வளர்ச்சியில் ரொமிலாவின் பங்களிப்பை நினைவுகூர்வதுடன், சமூக அறிவியலாக வரலாறு வளர்த்தெடுக்கப்பட்ட விதம் பற்றியும் நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
1970-இல் ஜவாஹர்லால் பல்கலையில் இணைந்த ரொமிலா தாப்பர், ஏ.எல். பாஷம், டி.டி. கோசாம்பி போன்றோரின் வழித்தடத்தில் பாடத் திட்டத்தைக் கடந்து சாத்தியமாகக் கூடிய எல்லா திசைகளிலும் மாணவர்களின் விவாதங்களை வளர்த்தெடுத்துச் சென்றிருக்கிறார்.
ரொமிலா தாப்பர் மேற்கொண்ட முதல் அடிப்படை மாற்றம், காலங்காலமாக அது அடைபட்டுக் கிடந்த பெட்டிக்குள்ளிருந்து இந்திய வரலாற்றை விடுவித்ததுதான் என்ற ஆசிரியரின் கூற்று மிகச் சரியே; அதை இந்த நூலும் மெய்ப்பிக்கிறது.
‘நூலில், வரலாறு எழுதுவது எப்படி? என்ற இயல் ஆழமானது. மன்னர்கள் காலத்தில் நிகழ்த்தப்பட்ட பண்பாட்டுச் சாதனைகளை மறுக்காவிட்டாலும் அந்தச் சாதனைகளை வியந்தோதுவது மட்டுமே வரலாற்றாசிரியனின் பணி அல்ல’ என்கிறார் ரொமிலா.
உரையாடல் என்ற தலைப்பில் ரொமிலா தாப்பருடனான நூலாசிரியரின் நேர்காணல் சேர்க்கப்பட்டிருப்பது சிறப்பு. குறிப்பாக, வரலாற்றை ‘கேள்விகளின்றி வரலாறு இல்லை. கேள்வி கேட்க ஒருபோதும் தயங்காதீர்கள்’ – நூலாசிரியரிடம் கூறியதையே ரொமிலா தாப்பரின் செய்தியாகவும் கொள்ளலாம்.
நன்றி: தினமணி, 4/4/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/9789390958467_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818